நியூயார்க்; ‘பாகிஸ்தான் பயங்கர வாதத்தின் மையப்புள்ளியாக திகழ்வதை உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டிருப்பது ஏன் என்பதை, அந்நாடு சிந்திக்க வேண்டும்’ என, இந்தியாவுக்கான ஐ.நா., துாதுக்குழுவின் தலைவர், மஹாவீர் சிங்வி கூறியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில், ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபை சார்பில், பயங்கரவாத எதிர்ப்பு குறித்த கலந்துரையாடல், இணையம் வாயிலாக, நேற்று முன்தினம் நடைபெற்றது.இதில், இந்திய துாதுக் குழுவிற்கு தலைமை தாங்கிய, வெளி விவகார அமைச்சக இணை செயலர், மஹாவீர் சிங்வி கூறியதாவது:கொரோனாவை எதிர்த்து போராட, உலகம் ஒன்றிணைந்து செயல்படுகிறது.
ஆனால், எல்லை தாண்டிய பயங்கர வாதத்திற்கு, நிதியுதவி செய்யும் பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது.அத்துடன், எங்கள் நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கான, வாய்ப்புகளைத் தேடி பயன்படுத்திக் கொள்கிறது.பாக்.,கிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக, தொடர் நடவடிக்கைகளை எடுக்கும்படி, உலக நாடுகள், அந்நாட்டிடம் கூற வேண்டும்.பாக்., பயங்கரவாதத்தின் மையப் புள்ளியாகவும், பாதுகாப்பான புகலிடமாவும், உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்படுவது ஏன் என்பதை, அந்நாடு சிந்திக்க வேண்டும்.
ஜம்மு- – காஷ்மீர் பிரச்னையில், ஆதாரமற்ற பொய் தகவல்களை வெளியிடுவது, அந்நாட்டின் வழக்கமாக உள்ளது. இந்திய எல்லையில், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக, பாக்., ராணுவம், நிதி, தளவாடங்களை வழங்குவதுடன், அதை, சுதந்திர போராட்டமாக சித்தரிக்க முயல்கிறது. பேரழிவு தரும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை, பாக்., தீவிரமாகக் கருத வேண்டும்.அந்நாடு, பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா மற்றும் ஜம்மு – -காஷ்மீர் பகுதிகளை, சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதுடன், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபடுகிறது.அந்நாட்டில், மத சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதுடன், அவர்களுக்கு எதிரான தாக்குதல்களும் தொடர்கின்றன. அல் குவைதா பயங்கரவாதிகளை, தன் நாட்டில் இருந்து, முழுமையாக வெளியேற்றியதாக கூறிய பிரதமர், இம்ரான் கான், அதன் தலைவர் ஒசாமா பின்லேடனை, தியாகி என, அந்நாட்டு பார்லி.,யில், கூறியதை, நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தங்கள் நாட்டில், 40 ஆயிரம் பயங்கரவாதிகள் இருப்பதையும், அவர்கள் அண்டை நாடுகளை தாக்கியதையும், அவர் ஒப்புக் கொண்டுள்ளார். ஜெய்ஷ் – இ – முகமது மற்றும் லஷ்கர் – இ – தொய்பாவை சேர்ந்த, 6,500 பாக்., பயங்கரவாதி கள், ஆப்கானிஸ்தானில் செயல்படுகின்றனர் என, ஐ.நா., பாதுகாப்பு குழு கூறியுள்ளது.ஐ.நா., உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளால், பாக்., பயங்கரவாதத்தின் மையமாக திகழ்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
dinamalar