கொரோனாவால் தப்பிய சீனாவில் கனமழை, வெள்ளத்தால் 3 கோடி பேர் பாதிப்பு

சீனாவில் 27 மாகாணங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் இரண்டாம் நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சீனாவில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 141 பேர் உயிரிழந்துள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

28,000க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. விவசாய நிலங்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டில் ஜியாங்க்சி மாகாணத்தில் பெய்து வரும் மழையால் மிகத்தீவிர வெள்ள அபாய அவசர நிலை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது 1998ம் ஆண்டுக்கு பிறகு மிக அதிக அளவாகும். 33 நதிகளில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட நிலை இப்போதும் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.

ஹூபேய் மாகாணத்திலும் இதுவரை இல்லாத அளவு திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. யாங்க்ஷி நதியில் ஹன்கோவ் நிலையத்தில் வெள்ளத்தின் அளவு 28.44 மீட்டராக உள்ளது. இது 2016ம் ஆண்டு அளவை விட மிக அதிகமாகும். மேலும் சாங்க்குவிங், அன்ஹூய், ஜியாங்க்சி, ஹூபேய் மாகாணங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் நிலைமை சிக்கலாகியுள்ளது.

dinamalar