வான் தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் பலி: துருக்கிக்கு ஈராக் கடும் கண்டனம்

வான் தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் பலியான சம்பவம் தொடர்பாக, துருக்கிக்கு ஈராக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாக்தாத்,  ஈராக் மற்றும் சிரியா எல்லையில் உள்ள குர்து இன போராளிகளை குறி வைத்து துருக்கி ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தநிலையில் ஈராக்கின் வடக்குப் பகுதியிலுள்ள தன்னாட்சி பெற்ற பிராந்தியமான குர்திஸ்தானில் சைடகன் நகரில் துருக்கி ராணுவம் நேற்று முன்தினம் வான் தாக்குதல் நடத்தியது.

அப்போது துருக்கி ராணுவத்தின் ஆளில்லா விமானம் ஒன்று ஈராக் எல்லை பாதுகாப்பு படை வாகனத்தின் மீது குண்டு வீசியது.

இதில் ஈராக் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் 2 பேரும் ராணுவ வீரர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது துருக்கி மீது ஈராக்குக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக ஈராக் வர இருந்த துருக்கி ராணுவ மந்திரியின் பயணத்தை ஈராக் அரசு ரத்து செய்துவிட்டது. மேலும் வான் தாக்குதல் தொடர்பாக ஈராக்குக்கான துருக்கி தூதரை நேரில் அழைத்து சம்மன் வழங்கி கடும் கண்டனம் தெரிவித்தது.

இது குறித்து ஈராக் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஈராக் பிராந்தியத்துக்குள் துருக்கி ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய அப்பட்டமான தாக்குதலை ஈராக் திட்டவட்டமாக நிராகரிக்கிறது. கடுமையாக கண்டிக்கிறது. இதன் காரணமாக நாளை (அதாவது இன்று) திட்டமிடப்பட்டிருந்த துருக்கி ராணுவ மந்திரியின் பயணம் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் துருக்கி ராணுவத்தின் வான்தாக்குதலுக்கு வலுவான எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக அந்த நாட்டின் தூதரை நேரில் அழைத்து சம்மன் வழங்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

dailythanthi