எச்-1பி விசா நடைமுறையில் தளர்வுகள் அறிவித்த டிரம்ப்: இந்தியர்களின் ஓட்டுகளை அள்ள திட்டம்

வாஷிங்டன்: அமெரிக்காவிற்கு வேலைக்குச் செல்லும் ஊழியர்களுக்கான எச்-1பி விசா நடைமுறையில் அதிபர் டிரம்ப் சில தளர்வுகளை அறிவித்துள்ளார்.

மென்பொருள் இன்ஜினியர்கள் உள்ளிட்ட, தனிச்சிறப்பு வாய்ந்த துறை நிபுணர்கள், அமெரிக்கா சென்று பணியாற்ற, எச்-1பி விசா வழங்கப்படுகிறது. வெளிநாட்டு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களின் ஆயிரக்கணக்கான ஊழியர்களை, எச்-1பி விசா வாயிலாக, அமெரிக்கா அனுப்பி வைக்கின்றன.

அதாவது, அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கி வேலை செய்ய எச்-1பி விசா பெற வேண்டும். இந்த ஊழியர்களுடன் வரும் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு எச்-4 விசா வாங்க வேண்டும். இதன்மூலம் அதிகம் பயன்பெற்று வருபவர்கள் இந்தியர்களும், சீனர்களும் தான். இந்தியாவில் இருந்து ஏராளமான ஐடி ஊழியர்கள் அமெரிக்காவில் தங்கள் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து பெரியளவில் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவைக் கண்டுள்ளது.

இதனால் அமெரிக்க பணியாளர்கள் வேலையிழப்பதால், வெளிநாட்டு பணியாளர்கள் அந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்வர் என எண்ணி, அமெரிக்கர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், எச்-1 விசா தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில உத்தரவுகளை பிறப்பித்தார்.

அதன்படி, நடப்பாண்டின் இறுதி வரை எச்-1பி மற்றும் எச்-4 விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இது அமெரிக்கா செல்ல விரும்பிய வெளிநாட்டினருக்கு பேரடியாக விழுந்தது.

இந்நிலையில் அதிபர் டிரம்ப் நேற்று எச்-1பி விசா மற்றும் எச்-4 விசா வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையில் சில தளர்வுகளை அறிவித்துள்ளார். அதன்படி, அமெரிக்காவில் வேலை செய்துவிட்டு சொந்த நாட்டிற்கு திரும்பியவர்கள், மீண்டும் அதே நிறுவனத்தில் அதே வேலைக்கு திரும்பினால் எச்-1பி விசா வழங்கப்படும். இந்த ஊழியர்களுடன் வரும் மனைவி, குழந்தைகளுக்கும் எச்-4 விசா வழங்கப்படும்.

மேலும் ஐடி சப்போர்ட், சுகாதாரத்துறை வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கும் விசா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தளர்வுகள் எல்-1 விசா வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்கர்களின் ஓட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டே டிரம்ப் இந்த தளர்வுகளை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இதே காரணத்திற்காக தான் டிரம்பை எதிர்த்து அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடன், துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த கலிபோர்னியா மாகாண செனட் சபை உறுப்பினர் கமலா ஹாரிஸ் போட்டியிடவுள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

dinamalar