ஆப்கானிஸ்தான் அமைதி குழுவைச் சேர்ந்த பெண் உறுப்பினர் மீதான கொலைவெறி தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்

பெண் உறுப்பினர் மீது தாக்குதல்

ஆப்கானிஸ்தான் அமைதி குழுவைச் சேர்ந்த பெண் உறுப்பினர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டு போரில் ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா பக்கபலமாக இருந்து வருகிறது.

எனினும் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்லும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

அதன் பலனாக கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்க அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதனைத் தொடர்ந்து தலீபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆப்கானிஸ்தான் அரசு சார்பில் 21 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு இயக்குனரகத்தின் முன்னாள் தலைவர் முகமது மசூம் ஸ்டானெக்சாய் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் முன்னாள் எம்.பி.யும், சமூக ஆர்வலருமான பாவ்ஷியா கூபி உள்ளிட்ட சில பெண் தலைவர்களும் உள்ளனர். மார்ச் மாத தொடக்கத்திலேயே இந்த குழு அமைக்கப்பட்டபோதிலும் இதுவரை தலீபான் பயங்கரவாதிகளுடன் இந்த குழு அமைதி பேச்சு வார்த்தையை தொடங்கவில்லை.

கைதிகளை விடுதலை செய்யும் விவகாரத்தில் ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதே அமைதி பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக இருந்து வந்தது. எனினும் தற்போது அந்த தடை நீங்கி விட்டது. அதன்படி இரு தரப்பும் கத்தார் தலைநகர் தோஹாவில் அடுத்த வாரம் பேச்சுவார்த்தையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அமைதி பேச்சுவார்த்தை குழுவில் உறுப்பினராக இருக்கும் பாவ்ஷியா கூபி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை பாவ்ஷியா கூபி தனது சகோதரி மரியம் கூபியுடன் கஜினி மாகாணத்திலுள்ள காராபாக் நகரில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு சந்தைக்கு அருகே காரை வழிமறித்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றனர்.

எனினும் இந்த தாக்குதலில் பாவ்ஷியா கூபியும், அவரது சகோதரியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதே சமயம் பாவ்ஷியா கூபியின் வலது கையில் காயங்கள் ஏற்பட்டன. எனினும் இது உயிருக்கு ஆபத்து தரக் கூடிய காயங்கள் இல்லை என பாவ்ஷியா கூபி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதேசமயம் இந்த தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என தலீபான் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சாளர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதி சல்மே கலீல்சாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆப்கானிஸ்தானில் பாவ்ஷியா கூபியை குறிவைத்து நடத்தப்பட்ட கொலை முயற்சியை நாங்கள் கண்டிக்கிறோம். இது ஆப்கானிஸ்தானின் அமைதி நடவடிக்கையை தாமதப்படுத்தவும் சீர்குலைக்க முயற்சிப்பவர்களின் கோழைத்தனமான செயல். தாக்குதலை கண்டனம் செய்வது மட்டுமல்லாமல் சமாதான முன்னெடுப்புகளை துரிதப்படுத்தவும் நான் அழைப்பு விடுக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

malaimalar