கொரோனா வைரஸ்
4 நாடுகளில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
பீஜிங்: சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று, பின்னர் அந்த நாடு முழுவதும் பரவியது. அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கால் பதித்தது. தற்போது சீனாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டாலும் கூட பிற நாடுகளில் பரவல் தொடர்கதையாய் நீண்டு கொண்டிருக்கிறது.
அந்த வகையில் 4 நாடுகளில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
அதிலும் 3 நாடுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பதிவாகி வருகிறது. அந்த நாடுகள் இந்தியா (65 ஆயிரம்), பிரேசில் (60 ஆயிரம்), அமெரிக்கா (52 ஆயிரம்) ஆகும். கொலம்பியாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு பதிவாகி வருகிறது.30-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
தினமும் ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிற நாடுகளாக லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகள் உள்ளன.
பெருவில் 9,441, அர்ஜெண்டினாவில் 7,498, மெக்சிகோவில் 7,231, சிலியில் 2,077, பொலிவியாவில் 1,388, டொமினிக் குடியரசில் 1,354, வெனிசூலாவில் 1,281, கவுதமாலாவில் 1,144, கோஸ்டா ரிக்காவில் 1,072, பனாமாவில் 1,069, ஈக்குவடாரில் 1,066 பேருக்கு பாதிப்பு பதிவாகிறது.
ஐரோப்பாவில் ஸ்பெயினில் 5,479, ரஷியாவில் 5,061, பிரான்சில் 2,667, உக்ரைனில் 1,847, இங்கிலாந்தில் 1,440, ஜெர்மனி, ருமேனியாவில் தலா 1,415 பேருக்கு தொற்று உறுதியாகி வருகிறது.
ஆசியாவில் பிலிப்பைன்சில் 6,134, ஈராக்கில் 4,013, ஈரானில் 2,501, வங்காளதேசத்தில் 2,766, இந்தோனேசியாவில் 2,307, கஜகஸ்தானில் 1,847, சவுதி அரேபியாவில் 1,383, ஜப்பானில் 1,360, துருக்கியில் 1,226 பேருக்கு தொற்று உறுதியாகி வருகிறது.
ஆப்பிரிக்காவில் தென் ஆப்பிரிக்கா, மொராக்கா, எத்தியோப்பியா ஆகியவற்றில் தலா ஆயிரம் முதல் 10 ஆயிரத்துக்கு இடையே கொரோனா பாதிப்பு பதிவாகின்றன. இந்த புள்ளி விவரங்களை உலக சுகாதார நிறுவனம், ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
malaimalar