13வது பொதுத் தேர்தலில் அழியா மையைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தயார்

13வது பொதுத் தேர்தலில் அழியா மையைப் பயன்படுத்துவதற்கு இசி என்ற தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது.

தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு வழங்கிய அந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொள்ள ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளதாக அதன் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார்  பெரித்தா ஹரியான் நாளேட்டிடம் கூறியிருக்கிறார்.

“எந்தப் பிரச்னையும் இல்லாமல் தவிர்ப்பதற்கு சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் அந்தப் பரிந்துரையை அமலாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.”

“13வது பொதுத் தேர்தலில் அழியா மை பயன்படுத்தப்படும். இதுவே தேர்தல் ஆணையத்தின் நோக்கமாகும். நாங்கள் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் பரிந்துரையை மதிக்கிறோம். என்றாலும் இன்னும் சில வேலைகளை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. 1981ம் ஆண்டுக்கான தேர்தல் (தேர்தலை நடத்தும் முறை) விதிமுறைகளில் திருத்தம் செய்வதும் அவற்றுள் அடங்கும்”, என அவர் அந்தப் பத்திரிக்கையிடம் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்வுக் குழு வழங்கிய பல பரிந்துரைகளில் அழியா மையைப் பயன்படுத்துவதும் ஒன்றாகும். தேசிய பாத்வா மன்றத்தின் பரிந்துரையைப் பொறுத்துதான் அதனைப் பயன்படுத்த தயாராக இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

2007ம் ஆண்டிலேயே பாத்வா மன்றம் அழியா மையைப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

TAGS: