மாலி நாட்டில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்: அதிபர், பிரதமர் கைது

பமாகோ: மாலியில் ராணுவ புரட்சி ஏற்பட்டதையடுத்து அந்நாட்டு அதிபர் இப்ராகிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் மெய்கா பவ்வ் சிஸ்சே ஆகியோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்குஆப்ரிக்க நாடான மாலி நாட்டின் அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா பயங்கரவாதத்தை ஒடுக்க தவறியதாகவும், தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும் எழுந்த புகாரில் கெய்டாவிற்கு எதிராக கடந்த 2 மாதங்களாக மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் ராணுவத்தில் பணியாற்றி வந்தவர்கள் திடீரென கிளர்ச்சியாளர்களாக மாறினர்.

நேற்றுஆயுதங்களுடன் தலைநகர் பமாகோவில் தெருக்களில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுக்கொண்டே சென்றதாக தெரிகிறது. மேலும், ராணுவ டாங்கிகள் நகரத்தில் வலம் வந்தன. இதையடுத்து நாட்டில் ராணுவ புரட்சி வெடித்ததாக கூறப்படுகிறது. நிலைமை முற்றியதையடுத்து பிரதமர் பவ்பவ் சிஸ்சே ராணுவ உயரதிகாரிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். பலனில்லை.

இந்நிலையில் அதிபர் இப்ராகிம் பவுபக்கர் கெய்டா மற்றும் பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு கட்டுப்பாட்டை ராணுவ கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதால், மாலியில் ராணுவம் ஆட்சியை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிபர் ராஜினாமா: பார்லி. கலைப்பு

அதிபர் இப்ராகிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் மெய்கா பவ்வ் சிஸ்சே ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்த ஐ.நா. அவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும், இதையடுத்து அந்நாட்டு பார்லிமென்ட் கலைக்கப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

dinamalar