சீனாவின் உகானில் செப்டம்பர் 1-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறப்பு

சீனாவின் உகான் நகரத்தில் தொற்று முற்றிலும் குறைந்ததால் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ஜிங், சீனாவில் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்” பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.48 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8.40 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1.72 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் முதன்முதலாக பரவத்தொடங்கிய சீனாவின் உகான் நகரத்தில், தொற்று முற்றிலும் குறைந்ததால் வரும் செவ்வாய்க்கிழமை முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமான காரணத்தால் சீன நகரமான உகானில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளையும் மீண்டும் திறக்கப்படும் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் பள்ளிக்கு மற்றும் வெளியே முகமூடி அணியவும், முடிந்தால் பொது போக்குவரத்தைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை ஆபத்தான சூழ்நிலை உருவானால் ஆன்லைன் கற்பித்தலுக்கு மாறுவதற்கான அவசரகால திட்டங்களையும் நகர நிர்வாகம் உருவாக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

dailythanthi