அமைதி ஒப்பந்தம் கையெழுத்து எதிரொலி; இஸ்ரேல் புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டு வந்தது ஐக்கிய அரபு அமீரகம்

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தின் எதிரொலியாக இஸ்ரேல் புறக்கணிப்பை ஐக்கிய அரபு அமீரகம் முறைப்படி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

அபுதாபி, 1948-ம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டதற்கு எகிப்து, ஜோர்டான், லெபனான், ஈராக், சிரியா ஆகிய மத்திய கிழக்கு நாடுகளும், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனால் மேற்கூறிய நாடுகள் இஸ்ரேலுடன் தூதரகம், வர்த்தகம் என எந்த விதமான உறவுகளையும் ஏற்படுத்தி கொள்ளவில்லை. மேலும் தொலைத்தொடர்பு, வர்த்தகம், வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் இஸ்ரேலை அந்த நாடுகள் புறக்கணித்து வந்தன. எனினும் 1979-ம் ஆண்டு எகிப்தும், 1994-ம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன. அதன் மூலம் அந்த 2 நாடுகளும் இஸ்ரேலுடன் தூதரகம் உள்ளிட்ட உறவுகளை ஏற்படுத்திக்கொண்டன.

இதனிடையே இஸ்ரேலுடன் நெருங்கிய நட்புறவை கடைபிடித்து வரும் அமெரிக்கா இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இந்த பலனாக இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே கடந்த 13-ந் தேதி வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், 3-வது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியுள்ளது. இதற்கு துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளின் உறவை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான தொலைபேசி சேவை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

இரு நாடுகளிலும் பரஸ்பர தூதரக அலுவலகங்களை அமைப்பது, தூதரக அதிகாரிகளை நியமிப்பது உள்ளிட்டவை குறித்து இரு தரப்புக்கும் இடையில் விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இஸ்ரேலை புறக்கணிப்பதை முறைப்படி முடிவுக்கு கொண்டுவரும் ஆணையை ஐக்கிய அரபு அமீரகத்தின் மன்னர் ஷேக் கலிபா பின் சயீத் அல் நஹ்யான் நேற்று பிறப்பித்தார். இது இரு நாடுகளின் உறவை பலப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

இந்த புதிய ஆணை இஸ்ரேலியர்கள் மற்றும் இஸ்ரேலிய நிறுவனங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கிறது. குறிப்பாக வைரம் மருந்து மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் ஊக்குவிக்கப்படும். மேலும் இந்த ஆணை ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள் இஸ்ரேலிய பொருட்களை வாங்குவதற்கும் வர்த்தகம் செய்வதற்கும் அனுமதிக்கிறது. அத்துடன் விமான போக்குவரத்து, வங்கி மற்றும் நிதி போன்ற பிற கூட்டு நிறுவனங்களின் வாய்ப்பை விரிவுபடுத்துகிறது.

இது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அரசின் இந்த புதிய ஆணை இஸ்ரேலுடன் தூதரக மற்றும் வணிக ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் முயற்சிகளுக்குள் வருகிறது. இது கூட்டு ஒத்துழைப்பை தொடங்குவதற்கான ஒரு பாதையை உருவாக்கிறது. இது பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதன் மூலமும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதன் மூலமும் இருதரப்பு உறவுகளுக்கு வழிவகுக்கிறது” என கூறப்பட்டுள்ளது.

dailythanthi