பிரணாப் முகர்ஜி ஒரு சிறந்த தலைவர் – டொனால்டு டிரம்ப் புகழாரம்

பிரணாப் முகர்ஜி – டொனால்டு டிரம்ப் (கோப்பு படம்)

வாஷிங்டன்: இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் 10 ஆம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார். அந்த பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்த கட்டி இருப்பதும், கொரோனா வைரஸ் தொற்றும் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மூளையில் உள்ள ரத்த கட்டியை அகற்ற சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் அவர் கோமா நிலைக்கு சென்றார். இதனால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனாவுடன் மேலும் நுரையீரல் தொற்று, சிறுநீரக கோளாறும் பிரணாப்பிற்கு ஏற்பட்டது.

இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரணாப் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு கொண்டுவரப்பட்ட பிரணாப் முகர்ஜியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் நேற்று மாலை பிரணாப் முகர்ஜியின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரணாப் மறைவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில்,’இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு நான் மிகுந்த வருத்தம் அடைந்தேன். சிறந்த தலைவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

malaimalar