பாக்.,குக்கு ஆயுதங்கள் வழங்க கூடாது: இந்திய கோரிக்கையை ஏற்றது ரஷ்யா

மாஸ்கோ : ‘பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை சப்ளை செய்யக் கூடாது என்ற இந்தியாவின் கோரிக்கையை, ரஷ்யா ஏற்றுக் கொண்டுள்ளது.

எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷ்யா, இந்தியா, சீனா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ளன. இந்நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், எஸ்.சி. ஓ., நாடுகளின் ராணுவ அமைச்சர்கள் மாநாடு, நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, ராணுவ அமைச்சர், ராஜ்நாத்சிங் தலைமையிலான குழு, ரஷ்யாவுக்கு சென்றுள்ளது.

ராஜ்நாத்சிங், ரஷ்ய ராணுவ அமைச்சர் மேஜர் ஜெனரல் சோயிகுவை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், இருவரும், இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பயங்கரவாதம் உள்ளிட்ட பல பிரச்னைகள் பற்றி விவாதித்தனர். பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை சப்ளை செய்ய கூடாது என, ரஷ்ய ராணுவ அமைச்சரிடம் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். இதை ஏற்றுக் கொண்ட ரஷ்ய அமைச்சர் சோயிகு, பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை ரஷ்யா சப்ளை செய்யாது என, உறுதியளித்தார்.

இந்த சந்திப்பு பற்றி, ‘டுவிட்டரில்’ ராஜ்நாத் சிங் வெளியிட்ட பதிவில், ‘ரஷ்ய ராணுவ அமைச்சருடன் நடத்திய பேச்சு, திருப்திகரமாக இருந்தது. இருவரும், ராணுவத்தை வலுப்படுத்துவது, ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் பற்றி விவாதித்தோம்’ என கூறியுள்ளார். இந்த சந்திப்பை தொடர்ந்து, ஏ.கே.47 ரக துப்பாக்கிகளின்,அதி நவீன வடிவமான. ஏ.கே.47 – 203 ரக துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தையை, இந்தியாவும், ரஷ்யாவும் இறுதி செய்துள்ளன.

இந்திய ராணுவத்துக்கு, ஏழு லட்சத்து, 70 ஆயிரம் துப்பாக்கிகள் தேவைப்படுகின்றன. இவற்றில், ஒரு லட்சம் துப்பாக்கிகள் இறக்குமதி செய்யப்படும். மீதி துப்பாக்கிகளை, உத்தரபிரதேசத்தில் உள்ள கொர்வா ஆயுத உற்பத்தி தொழிற்சாலையில், இந்தியா – -ரஷ்யா கூட்டாக தயாரிக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

dinamalar