43 சிப்பந்திகள், 6 ஆயிரம் கால்நடைகளுடன் ஜப்பானில் சரக்கு கப்பல், புயலில் சிக்கி மாயம்

43 சிப்பந்திகள், 6 ஆயிரம் கால்நடைகளுடன் நியூசிலாந்தில் உள்ள நேப்பியர் துறைமுகத்தில் இருந்து சீனாவுக்கு சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல், வழியில் ஜப்பானில் புயலில் சிக்கி மாயமானது. இந்த கப்பலை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்த ஜப்பான் கடலோர காவல்படையினர் ஒரு மாலுமியை பத்திரமாக மீட்டபோது எடுத்த படம்

டோக்கியோ: ‘தி கல்ப் லைவ்ஸ்டாக்-1’ என்ற சரக்கு கப்பல், 43 சிப்பந்திகளுடனும், சுமார் 6 ஆயிரம் கால்நடைகளுடனும், நியூசிலாந்து நாட்டில் நேப்பியர் துறைமுகத்தில் இருந்து சீனாவில் உள்ள ஜிங்டாங் துறைமுகம் நோக்கி கடந்த 14-ந்தேதி புறப்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலையில் மேசாக் புயலுக்கு மத்தியில் கிழக்கு சீன கடலில் சென்று கொண்டிருந்தது.

ஜப்பானில் ககோஷிமா மாகாணத்தில் உள்ள அமாமி-ஓஷிமா தீவுக்கு மேற்கே 185 கி.மீ. தொலைவில் வந்தபோது புயலில் சிக்கி மாயமானது. முன்னதாக இந்த கப்பலில் இருந்து ஜப்பான் கடலோர காவல் படைக்கு துயர அழைப்பு சென்றுள்ளது.

இந்த நிலையில், ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான ‘பி-3சி’ என்ற கண்காணிப்பு விமானம், உயிர் காப்பு உடை அணிந்து, ஒருவர் கடலில் குதித்து அலைந்து கொண்டிருந்ததை கண்டது. அவரை அந்த விமானம் பத்திரமாக மீட்டது. அவர், மாயமான சரக்கு கப்பலில் வந்த பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த சிப்பந்தி என தெரிய வந்தது.

அவர் நல்ல உடல்நலத்துடன் மீட்கப்பட்டாலும், தான் வந்த கப்பல் கவிழ்ந்து மூழ்கி விட்டதாக கூறி உள்ளார். இந்த தகவலை ஜப்பான் கடலோர காவல் படையின் பிராந்திய தலைமை அலுவலக செய்தி தொடர்பாளர் யுய்சிரோ ஹிகாஷி தெரிவித்தார்.

அந்த கப்பலில் சிப்பந்திகளாக வந்த 43 பேரில் 39 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டினர், 2 பேர் நியூசிலாந்து நாட்டினர், 2 பேர் ஆஸ்திரேலிய நாட்டினர் என தகவல்கள் கூறுகின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு சிப்பந்தி மீட்கப்பட்டு விட்ட நிலையில், மற்ற 42 சிப்பந்திகளின் கதி என்ன ஆனது, 6 ஆயிரம் கால்நடைகள் என்ன ஆயின என்பது உடனடியாக தெரியவில்லைஇது தொடர்பாக ஜப்பான் ராணுவ அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், கடலோர காவல் படை, ஒரு கண்காணிப்பு விமானத்துடன், கடல்சார் தற்காப்பு படையுடன் ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. புதன்கிழமை இரவு ஒரு நபர் மீட்கப்பட்டுள்ளார் என கூறியது. கப்பலை தேடும் பணியில் ரோந்து படகுகளை ஜப்பான் கடலோர காவல் படை தீவிரமாக ஈடுபடுத்தி உள்ளது.

ஜப்பானில் ஒசாகாவில் உள்ள துணைத்தூதரகம் நிலைமையை கண்காணித்து, அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக பிலிப்பைன்ஸ் வெளிவிவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டை சேர்ந்த சிப்பந்திகளின் குடும்பங்களுக்கு தூதரக ரீதியிலான உதவிகளை அளித்து வருவதாக ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் தெரிவித்துள்ளன.

பலத்த சூறாவளியும், இடைவிடாத மழையும் காணாமல் போன கப்பலை தேடும் முயற்சியில் தாமதத்தை ஏற்படுத்தி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே மேசாக் புயலால், தென் கொரிய நகரமான புசான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,200 பேர் வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், 1.20 லட்சம் வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கி இருப்பதாகவும், புயலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

malaimalar