மாஸ்கோ, கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, ரஷியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. அமெரிக்காவின் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசியை வருகிற நவம்பர் 1-ந் தேதிக்குள் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் டிரம்ப் நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.
ரஷியாவைச் சேர்ந்த கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் ஸ்புட்னிக்-5 என்ற தடுப்பூசியை தயாரித்து இருக்கிறது. இந்த தடுப்பூசியின் ஆரம்பகட்ட பரிசோதனைகள் மிகுந்த நம்பிக்கை அளிக்கும் வகையிலும் ஆக்கபூர்வமாகவும் இருப்பதாகவும், இந்த தடுப்பூசிதான் உலகில் முதன் முதலாக பயன்பாட்டுக்கு வரும் என்று ரஷிய அரசு சமீபத்தில் அறிவித்தது. ஆனால் உரிய காலஅவகாசத்துடன் சோதனை மேற்கொள்ளாமலேயே ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது ஆபத்து என்றும், இதை ஏற்க முடியாது என்றும் பல்வேறு நாடுகளின் மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை அதிக எண்ணிக்கையிலான மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் 3-வது கட்ட பரிசோதனை தொடங்கிவிட்டதாக கமலேயா ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைத் தலைவர் டெனிஸ் லோகுனோவ் நேற்று தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ஸ்புட்னிக்-5 தடுப்பூசி ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தன்னார்வலர்களுக்கு செலுத்தி பார்க்கும் 3-வது கட்ட பரிசோதனை தொடங்கிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
ரஷிய தடுப்பூசி பாதுகாப்பானது, குறைந்த எண்ணிக்கையிலான மனிதர்களுக்கு செலுத்தி சோதித்து பார்த்ததில் அது, ஆன்டிபாடி உற்பத்தியை தூண்டுகிறது என தெரியவந்துள்ளதாக ‘லேன்செட்‘ ஆய்வு முடிவு கூறுகிறது.
76 பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் 2 தயாரிப்புகளை இடைவெளிகளில் செலுத்தி உள்ளனர். அதில் இவை நல்ல பாதுகாப்பானவை என்பது 42 நாளில் தெரிய வந்துள்ளது. அதே போன்று ஆன்டிபாடிகள் என்னும் நோய் எதிர்ப்பு பொருள் உற்பத்தியை 21 நாளில் தூண்டுவதும் தெரிய வந்து இருக்கிறது.
மேலும் இரண்டாம் நிலை ஆய்வில், இந்த தடுப்பூசி ‘டி செல்’களையும் உற்பத்தி செய்வது கண்டறியப்பட்டுள்ளது. இதெல்லாம் கொரோனாவுக்கு எதிராக இந்த தடுப்பூசி செயல்படுகிற ஆற்றலை கொண்டுள்ளது என்பதற்கு ஆதாரமாக அமைந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ஒவ்வாமை, ஆஸ்துமா போன்றவற்றை குணப்படுத்த வழங்கப்படும் ஹைட்ரோகோர்ட்டிசோன் மருந்து கொரோனா தொற்று முற்றிய நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு மிகுந்த பயன் அளிக்கும் வகையில் இருப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்து உள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் 200 பேருக்கு இந்த மருந்தை செலுத்தி பார்த்ததில் அவர்களது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், 93 சதவீதம் பயன் அளிக்கும் வகையில் பரிசோதனை அமைந்து இருந்ததாகவும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பரிசோதனை உலக அளவில் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டு இருக்கிறது
dinamalar