சிங்கப்பூரில் ஆட்குறைப்பு: நாடு திரும்ப 11,000 இந்தியர்கள் விண்ணப்பிப்பு!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வதால், மீண்டும் 11 ஆயிரம் இந்திய தொழிலாளர்கள் வேலையிழந்து நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளனர்.

இந்திய தூதரக அதிகாரி பி.குமரன் தெரிவித்துள்ளதாவது: கடந்த மே மாதம் முதல் 17,000 இந்தியர்கள் 120 சிறப்பு விமானங்களில் இந்தியா திரும்பியுள்ளனர். தற்போது நூற்றுக்கணக்கானோர் வேலையிழந்து நாடு திரும்புவதற்காக தூதரகத்தில் பதிவு செய்து வருகின்றனர். புதிதாக இதுவரை 11,000 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் வேலையிழந்தோர், மருத்துவச் சிகிச்சைக்காக நாடு திரும்புவோர், குடும்பச் சூழ்நிலை காரணமாகத் திரும்புவோரும் உள்ளனர்.

இந்தியாவின் ‘வந்தேபாரத்’ திட்டத்தின் படி, சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் வேலை இழந்து தவிக்கும் இந்தியர்கள் தாய்நாடு திரும்பலாம். தேவைப்பட்டால் மேலும் சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்படும்.

இந்தியா – சிங்கப்பூர் உறவுகளை மேம்படுத்த இந்தியா – ஆசியான் ஹேக்கத்தானை ஆண்டு இறுதியில் திட்டமிட்டுள்ளோம். அதே போல் இந்திய ரூபே கார்டுகள் மூலம், சிங்கப்பூரில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல், நம் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள், தொழிலகங்கள் இருநாடுகளுக்கிடையே நடைபெறும் விதமாக குளோபல் அடுக்கு ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

சிங்கப்பூர் உற்பத்தி கூட்டமைப்புடன் உற்பத்தி கூட்டுறவு வாய்ப்புகளுக்காக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். உலக உற்பத்தி ஸ்தலமாக இந்தியா விளங்க சிங்கப்பூர் முதலீடுகள் உதவும். மேலும் உற்பத்தித் துறையில் இந்திய தொழிலாளர்களின் திறன்வளர்ப்புக்கும் உதவும்.

சிங்கப்பூர், இந்திய சந்தையில் நீண்டகால அன்னிய முதலீட்டு ஆதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மூலம் நம் நாட்டில் மேலும் தொழிற்சாலைகளை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

dinamalar