கல்வி நிறுவனங்களுடன் தொடர்பில் இருங்கள்: இந்திய மாணவர்களுக்கு சீனா அறிவுரை

ஆன்லைன் கல்வி

சீன கல்வி நிறுவனங்களில் படிக்கும் 23 ஆயிரம் இந்திய மாணவர்கள், சீனாவுக்கு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களை கல்வி நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்குமாறு சீனா அறிவுறுத்தி உள்ளது.

பீஜிங் : சீனாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்திய மாணவர்கள் பல்வேறு படிப்புகளை படித்து வருகிறார்கள். அவர்களில் 21 ஆயிரம்பேர் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் ஆவர்.

கடந்த ஜனவரி மாதம் புத்தாண்டு விடுமுறைக்கு இந்திய மாணவர்கள் இந்தியாவுக்கு திரும்பினர். அதே நேரத்தில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவியதால், சர்வதேச விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தற்போது, புதிய கல்வி ஆண்டு தொடங்கி நடந்து வருகிறது. ஆனால், மறுஉத்தரவு வரும்வரை, வெளிநாட்டு மாணவர்களும், ஆசிரியர்களும் சீனாவுக்கு வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்திய மாணவர்கள், படிப்பை தொடர சீனாவுக்கு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள்.

இதுகுறித்து சீனாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் அவர்கள் தெரிவித்தனர். அவர்களின் கவலைகளை சீன வெளியுறவு அமைச்சகத்திடம் இந்திய தூதரகம் எடுத்து கூறியது.

இதையடுத்து, இந்திய தூதரகத்துக்கு சீன வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உலக அளவில் கொரோனா சூழ்நிலை இன்னும் தெளிவற்றதாகவே இருக்கிறது. வெளிநாட்டினர் அனுமதி தொடர்பான சீன அரசின் கொள்கைகள் படிப்படியாக மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்திய மாணவர்கள் தாங்கள் படிக்கும் சீன கல்வி நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். அந்த நிறுவனங்களின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்.

தங்கள் கல்வி முன்னேற்றத்தை பாதுகாக்கும்வகையில், ஆன்லைன் வழி கல்வியை பின்பற்றலாம். அதே சமயத்தில், சீன கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன், அவர்களின் நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், “இந்திய மாணவர்கள், சீனாவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துணை தூதரகங்களின் இணையதளங்களையும், சமூக ஊடக சேனல்களையும் பார்த்து, சீனாவுக்கு திரும்புவது குறித்த அவ்வப்போதைய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்” என்று இந்திய தூதரகம் கூறியுள்ளது.

malaimalar