பல்கலைகழக நுழைவில் வஞ்சிக்கப்படும் ஏழை மலேசிய தமிழினம், இண்ட்ராப்

மலேசியாவில் இந்தியர்கள் மூன்றாவது பெரிய சமூகம் என்பது அப்பட்டம்.

ஆனால் நம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் அவ்வாறு பிரதிபலிக்கப்படுவதிலிருந்து ஓரங்கட்டப்பட்டிருக்கிறது. அனைத்து சமூக பொருளாதார உரிமைகளிலிருந்தும் நாம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம், வஞ்சிக்கப்படுகிறோம்.

இந்த அவலம் வெகு சாமர்த்தியமாக, கைதேர்ந்த கபடக்காரர்களால் மிக நேர்தியாக திட்டமிடப்பட்டு வெகுசாதுர்யமாக யாராலும் உணரப்படாத வகையில் அறங்கேற்றம் கண்டு வருகிறது. இந்த உண்மை 2வது இண்ட்ராப் தேசிய மாநாட்டில் அம்பளப்படுத்தப்பட்டது. 20 மலேசிய  அரசாங்க பல்கலைகழகங்களில் பயிலும் பட்டதாரி மாணவர்களின் புள்ளி விபரங்களை ஆராய்ந்ததில் மலேசிய இந்தியர்கள் வஞ்சிக்கப்பட்டதின் விஸ்வரூபம் பேராளர்களைக் கதிகலங்கச் செய்தது.

அந்த 20 பல்கலைக்கழகங்களிலும் சுமார் 453,629 மாணவர்கள் பயில்கிறார்கள். இன ரீதியாக அவர்களின் விபரம் கீழ்வருமாறு:

மலாய் மாணவர்கள்: 328,309 அல்லது 72.37%; சீன மாணவர்கள: 43,624 அல்லது 9.62%; வெளிநாட்டு மாணவர்கள்: 24,622 அல்லது   5.4%; மற்றவர்கள் (lain lain) மாணவர்கள்: 23,559 அல்லது 5.19%;  சபா/சரவாக் மாணவர்கள் 21,616 அல்லது 4.77%; இந்திய மாணவர்கள்: 11,639 அல்லது 2.57%;
பூர்வீக குடி மாணவர்கள்: 260 அல்லது 0.06%

நமது வரிப்பணத்தில் 24,662 ஆப்பிரிக்க, அரபு மற்றும் இதர நாட்டு மாணவர்கள் பட்டப் படிப்பு மேற்கொள்கிறார்கள். ஆனால் இந்நாட்டின் வளப்பத்திற்காக உழைத்து உழைத்து இன்னும் வறுமையில் உழலும் நம் மாணவர்கள் வெறும் 2.57 விழுக்காடுதானா?

மலேசிய மக்கள் தொகையில் மற்றவர்கள் (lain lain) வெறும் 1.2% மட்டுமே. ஆனால் இந்த தரப்பில் இருந்து 23,559 மாணவர்களா? யார் இந்த lain lain சமூகத்தினர்? எங்கிருந்து வந்தனர் இத்தனை lain lain மாணவர்கள்? இந்தியர்களின் எண்ணிக்கையை விட இவர்கள் 6.5 விழுக்காடு குறைவு. ஆனால் நம் மாணவர்களை காட்டிலும்  இவர்களின் எண்ணிக்கை 11,920 அதிகம்!!

இந்நாட்டில் 3 ஆவது பெரிய சமூகமாக இருந்தும் பல்கலைக்கழகத்தில் 6 ஆவது இடத்தில் அவமானப்பட்டுக் கிடக்கிறோம்.

யார் இந்த அவலத்திற்குக் காரணம்? நம் சமூகத்தை பிரதிநிதிப்பதாகக் கூறும் அம்ணோவின் கைப்பாவைகள் இன்னும் எத்தனை நாட்களுக்கு மண்டியிட்டு கையேந்தப் போகிறார்கள்?

அவர்கள் ஒருபுறம் என்றால், பல்லின கோட்பாடுகள் பேசும் எதிர்க்கட்சி உறுப்பினர்களாவது இத்தனை ஆண்டுகளில் இது பற்றி வாய் திறந்திருப்பார்களா? தமிழனின் அவலத்தை அம்பலப்படுத்தி தேசிய கவனத்தை திருப்பிவிட்டால் இவர்களின் செல்வாக்குக்கு இழுக்கு நேர்ந்திடுமா?

நாடாளுமன்ற இருக்கைகளைச் சூடேற்ற மக்கள் உங்களை தேர்ந்த்தெடுக்கவில்லை. மக்களின் ஆற்றாமைகளுக்கு ஆறுதல் தேடுங்கள். இந்த வஞ்சிக்கப் பட்டுகொண்டிருக்கும் ஏழை இந்தியனின் வறுமையையும் அவலத்தையும் உங்கள் அரசியல் விளையாட்டு பகடைக்காயாக ஆக்காதீர்கள் என்று கூறுகிறார் இண்ட்ராப் தேசிய ஒருங்கிணைப்பாளர் டபுள்யு சாம்புலிங்கம்.

TAGS: