சிலாங்கூரைக் காப்பாற்றி மலாய்க்காரர்களை ஒன்றுபடுத்த ஒரே ஒருவரால் மட்டுமே முடியும். அந்த ஒருவர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான பாஸ் கட்சியைச் சேர்ந்த ஹசன் அலி.
அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவின் மூத்த ஆசிரியர் சைனி ஹசான் தம் வாராந்திர பத்தியில் இவ்வாறு கூறுகிறார்.
ஹசனை(வலம்) ஒரு போராளி என்று வருணித்த சைனி, சிலாங்கூர் சுல்தானுக்கும் அவரைப் பிடிக்கும் என்றார். மேலும், இப்போதைய மாநில அரசு யாராவது ஒருவரைக் கண்டு அஞ்சுகிறது என்றால் அந்த ஒருவர் ஹசன்தான். அவருக்கு பாஸ் உறுப்பினர்கள் பலரது ஆதரவும் அரசு ஊழியர்களின் ஆதரவும் உண்டு.
நடப்பு மாநிலச் செயலாளரின் நியமனத்தில் சர்ச்சை உண்டானபோது அவருக்கு ஆதரவாக நின்ற ஒரே ஆட்சிக்குழு உறுப்பினர் அவர்தான். மாநிலத்தில் முஸ்லிம்களின் நலன்களுக்காகவும் போராடுபவர் அவர்.
“அவர் ஒரு போராளி என்பது தெளிவு.பதவி பறிபோகும் என்றெல்லாம் பயப்படமாட்டார்.கண்ணியத்தையும் இஸ்லாத்தின் புனிதத்தையும் மலாய்க்காரர் ஒற்றுமையையும் கட்டிக்காப்பதற்கு முன்னிற்பார்.”
இப்படிப்பட்ட பண்புகள் கொண்ட ஹசனே, அம்னோவுக்கும் பாஸுக்குமிடையில் ஓர் இணைப்பை ஏற்படுத்த மிகவும் பொருத்தமானவர் என்று சைனி கருதுகிறார். “இஸ்லாத்தின் புனிதத்தையும் மலாய்க்காரர் ஒற்றுமையையும் நிலைநிறுத்துவதற்காக” அவர் அதைச் செய்ய வேண்டும் என்கிறார் அவர்.
சுல்தானின் ஆதரவும் அங்கீகாரமும் அவருக்கு உண்டு என்பதற்கு எதிர்வரும் சுல்தானின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது ஹசனுக்கு சிலாங்கூரின் உயர் விருது ஒன்று வழங்கப்படும் என்று கூறப்படுவதே சான்றாகும் என்று சைனி குறிப்பிட்டுள்ளார்.
உத்துசானில் தம் வாராந்திர பத்தியில், இஸ்லாத்துக்காகவும் மலாய்க்காரர்களுக்காகவும் அம்னோவும் பாஸும் பகையை மறந்து ஒன்றுபட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்திவரும் சைனி இவ்வாரப் பத்தியில் “சிலாங்கூரை எப்படியும் காப்பாற்ற வேண்டும்” என்று முழக்கமிட்டிருக்கிறார்.