ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக கத்தார் நாட்டில் தலீபான் தலைவர்களுக்கும், ஆப்கானிஸ்தான் அரசு குழுவினருக்கும் இடையே பேச்சு வார்த்தை ஒரு வார காலத்துக்கு மேலாக நீடித்து வருகிறது.
காபூல், இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையேயான மோதல்களும் வலுத்து வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவில் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் 14 போலீசாரும், பாதுகாப்பு படை வீரர்களும் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் ராணுவம் மற்றும் போலீஸ் நடத்திய அதிரடி தாக்குதலில் 25 தலீபான்கள் பலியாகினர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடி தருகிற வகையில் தலீபான்கள் தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடி மீது துப்பாக்கியால் சுட்டு கொடூரமான தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 28 போலீசார் கொன்று குவிக்கப்பட்டனர்.
இதுபற்றி உரூஸ்கான் மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் ஜெல்காய் எபாடி கூறும்போது, “தலீபான்கள் முதலில் 28 போலீசாரும் சரண் அடைந்தால் வீட்டுக்கு செல்ல வாய்ப்பு தருவதாக கூறி உள்ளனர். ஆனால் அவர்கள் சரண் அடைய மறுத்து துப்பாக்கியை கைகளில் எடுத்தபோது அவர்கள் அனைவரையும் தலீபான்கள் சுட்டுக்கொன்றனர்” என தெரிவித்தார்.
இந்த மோதலின்போது 3 போலீசார் மட்டும் தப்பித்து விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன
dailythanthi