வாஷிங்டன்: ‘இந்தியாவுடனும், பிரதமர் நரேந்திர மோடியுடனும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நெருக்கமான நட்பு பாராட்டுவதால், அதிபர் தேர்தலில், அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவை பெரும் அளவில் பெறுவார்’ என, கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பரில் நடக்கிறது; இதில், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில், ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.அமெரிக்காவின், புளோரிடா, மிச்சிகன், பென்சில்வேனியா, ஜார்ஜியா, வடக்கு கரோலினா, விர்ஜினியா, டெக்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான, அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை உள்ளது.இவர்களின் ஆதரவு, யாருக்கு அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து, அதிபர் டிரம்ப்பின் தேர்தல் வெற்றிக்காக பணியாற்றும், ‘அல் மேசன்’ நிறுவனம், கருத்துக் கணிப்பு நடத்தியது.
அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:அமெரிக்க வாழ் இந்தியர்களை, அதிபர் டிரம்ப் மதிக்கிறார். இந்தியாவையும், பிரதமர் நரேந்திர மோடியையும், சம அளவில் நேசிக்கிறார். அவருடன் நெருங்கிய நட்பு பாராட்டுகிறார்.காஷ்மீர் பிரச்னை போன்ற, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில், டிரம்ப் தலையிடுவதில்லை. டிரம்ப் வெற்றி பெற்றால், அது சீனாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். டிரம்ப்பின் சீன எதிர்ப்பை, இந்தியர்களும் விரும்புகின்றனர். இந்த காரணிகள் அனைத்தும், அமெரிக்க வாழ் இந்தியர்களை, டிரம்ப்புக்கு ஆதரவாக திருப்பியுள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தோற்றால் என்ன செய்வீர்கள்?’அதிபர் தேர்தலில் ஒருவேளை தோல்வியை சந்தித்தால், அமைதியான முறையில் பதவி விலகுவீர்களா’ என, அதிபர் டிரம்ப்பிடம், பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.அதற்கு பதில் அளித்த டிரம்ப், ”என்ன நடக்கிறது என்பதை பார்க்கத்தானே போகிறோம். ஆட்சி மாற்றம் இருக்காது. இதே ஆட்சி தொடரும்,” என்றார்.