‘மெஸன்சாட்’ கியூப் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

‘மெஸன்சாட்’ கியூப் செயற்கைக்கோள்

அபுதாபி, ராசல் கைமா பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய ‘மெஸன்சாட்’ கியூப் செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

அபுதாபி: அமீரக விண்வெளி ஏஜென்சி சார்பில் வழங்கிய நிதியில், அபுதாபி கலீபா பல்கலைக்கழகம் மற்றும் ராசல் கைமா அமெரிக்க பல்கலைக்கழகம் ஆகியவைகளில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவர்களின் கூட்டு முயற்சியில் ‘மெஸன்சாட்’ எனப்படும் சிறிய கியூப் வகை செயற்கைக்கோள் கலீபா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது. இது அமீரகத்தில், சுற்றுச்சூழலை ஆய்வு செய்யும் முதல் செயற்கைக்கோள் ஆகும். மொத்தம் 2.7 கிலோ எடை கொண்ட இந்த சிறிய செயற்கைக்கோளின் இறுதி கட்ட சோதனைகள் கடந்த வாரம் நிறைவடைந்து அமீரக நேரப்படி நேற்று மதியம் 3 மணியளவில் ரஷியாவின் ‘பிளஸ்டெக் காஸ்மோட்ராம்’ தளத்தில் இருந்து ‘சோயுஸ் 2 பி’ என்ற ராக்கெட்டில் பொருத்தி விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த செயற்கைக்கோளுடன் மேலும் 18 நானோ செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியில் இருந்து 575 கி.மீ. உயரத்தில் இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் பூமியை அதன் வட்டப்பாதையில் மணிக்கு 21 ஆயிரத்து 900 கி.மீ வேகத்தில் சுற்றி வரும்.

இந்த செயற்கைக்கோளின் செயல்பாடுகளை அபுதாபி கலீபா பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் ஆய்வுக்கூட கட்டுப்பாடு அறை மற்றும் ராசல் கைமா அமெரிக்க பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘மெஸன்சாட்’ செயற்கைக்கோள் மூலம் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், குளோரோ புளூரோ கார்பன் உள்ளிட்ட வாயுக்களின் அளவு மற்றும் நச்சுத்தன்மைகளை ஆராய்ச்சி செய்து தகவல்களை சேகரிக்கும். இதற்காக ஆர்.ஜி.பி. கேமரா அதில் பொருத்தப்பட்டுள்ளது. விண்வெளியில் சேகரிக்கும் தகவல்களை ‘இன்பெரா ரெட்’ எனப்படும் அகச்சிகப்பு கதிர்கள் மூலம் உருவாக்கப்படும் சிற்றலை வரிசையில் (1000 முதல் 1650 நானோ மீட்டர்) தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும்.

மேற்கண்ட தகவலை அமீரக விண்வெளி ஏஜென்சி தெரிவித்துள்ளது

malaimalar