உள்நாட்டுப்போர்; கொரோனா நெருக்கடி – சிரியாவில் 46 லட்சம் குழந்தைகள் உணவின்றி தவிப்பு

சிரியாவில் கடந்த 6 மாதத்தில் நாடு முழுவதும் உணவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையானது 46 லட்சமாக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

டமாஸ்கஸ், சிரியாவில் உள்நாட்டுப் போர், ஊழல், மேற்கிந்திய பொருளாதாரத் தடைகள் மற்றும் அண்டை நாடான லெபனானின் பொருளாதார நெருக்கடி போன்ற பிரச்சினைகளால் கடந்த 10 ஆண்டுகளில் 4 லட்சம் பேர் பலியாகியுள்ளனர், மேலும் அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பாதி பேர் இடம்பெயர்ந்துள்ளனர். சில மாதத்திற்கு முன், உள்ளூர் நாணயம் செயலிழந்ததால், பல குழந்தைகள் உணவு கூட வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே போரினால் நிலைகுலைந்துள்ள சிரியாவில் கொரோனா தொற்றும் பரவுவதால் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.

இந்த நிலையில் சிரியாவில் கடந்த 6 மாதத்தில் நாடு முழுவதும் உணவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையானது 46 லட்சமாக உயர்ந்துள்ளதாக சேவ் தி சில்ட்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சிரியாவில் ஊட்டச்சத்து உள்ள உணவான ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் போன்ற பழவகைகள் 65 சதவீத குழந்தைகளுக்கு கடந்த 3 மாதங்களாக கிடைக்கவில்லை என கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் ஆதரவுடைய சிரிய ஜனநாயகப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடகிழக்கு சிரியாவில், கிட்டத்தட்ட 25 சதவீத குழந்தைகள் குறைந்தது 9 மாதங்களாக பழவகைகளை சாப்பிடவில்லை என்று கூறியுள்ளனர்.

அங்கு வாழும் 8 குழந்தைகளில் ஒருவர் ஊட்டசத்து குறைபாட்டால் வாழ்நாள் முழுவதும் உடல்நலக் குறைவை எதிர்கொள்கின்றனர். குழந்தைகளை காப்பாற்ற சர்வதேச சமூகம் உதவிக்கரம் நீட்ட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

dailythanthi