மரபணு மாற்றம் செய்யும் வழியை கண்டுபிடித்த 2 பெண் விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல் பரிசு

மரபணு மாற்றம் செய்யும்வழியை கண்டுபிடித்ததற்காக 2 பெண் விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

ஸ்டாக்ஹோம், மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய 6 துறைகளில் தன்னிகரற்ற சாதனை படைக்கிறவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 5-ந் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மருத்துவத்துக்கான நோபல் பரிசு, ஹெபாடைடிஸ்-சி வைரசை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் ஹார்வே ஜே. ஆல்டர், சார்லஸ் எம்.ரைஸ், மைக்கேல் ஹாக்டன் ஆகியோருக்கும், இயற்பியலுக்கான நோபல் பரிசு கருந்துகளை உருவாக்கம், நட்சத்திர மண்டலத்தின் காணப்படும் அதிசய பொருள் கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்காக ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு ஜென்சல், ஆண்ட்ரியா கெஸ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வரிசையில் வேதியியலுக்கான நோபல் பரிசை சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் சுவீடன் அறிவியல் அகாடமியின் வல்லுனர் குழு நேற்று அறிவித்தது. இந்த நோபல் பரிசை இம்மானுவேல் சர்பென்டியர், ஜெனிபர் டவுட்னா ஆகிய 2 பெண் விஞ்ஞானிகள் கூட்டாக பெறுகிறார்கள். இவர்கள், ஒரு செல் அல்லது உயிரினத்தின் மரபணுவில் குறிப்பிட்ட மாற்றங்களை செய்வதற்கான வழியை (ஜெனோம் எடிட்டிங்) கண்டுபிடித்ததற்காக வேதியியல் நோபல் பரிசு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஆணின்றி 2 பெண்கள் நோபல் பரிசை கூட்டாக பெறுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. விஞ்ஞானி இம்மானுவேல் சர்பென்டியர் (வயது 51), பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். இவர், ஜெர்மனியில் பெர்லின் நகரில் உள்ள மேக்ஸ் பிளாங்க் நோய்க்கிருமிகள் அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியையாக உள்ளார்.

ஜெனிபர் டவுட்னா (56), அமெரிக்காவை சேர்ந்தவர். இவர் அங்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியல், மூலக்கூறு மற்றும் உயிரியல் துறை பேராசிரியராக உள்ளார். இவர்கள் இருவருக்கும் தலா ஒரு தங்க பதக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். பரிசுப்பணம் 1.1 மில்லியன் டாலரை (சுமார் ரூ.8¼ கோடி) இருவரும் சமமாக பகிர்ந்து கொள்வார்கள்.

dailythanthi