அழியா மையை சோதனை செய்ய இரசாயனத் துறை தயார்

வரும் பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படவிருக்கும் அழியா மையில், இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் ஏதும் கலந்துள்ளதா என்பதைக் கண்டறிய சோதனை நடத்துவதற்கு இரசாயனத் துறை தயாராக இருக்கிறது.

இவ்வாறு அதன் தலைமை  இயக்குநர் அகமட் ரிட்சுவான் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார்.

என்றாலும் அந்தச் சோதனையை நடத்துவதற்கான உத்தரவு எதனையும் தமது துறை இது வரை பெறவில்லை என்றும் அவர் சொன்னார்.

“இதுகாறும் எங்களுக்கு அதிகாரத்துவ உத்தரவு ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் தேவை ஏற்பட்டால் நாங்கள் அந்தக் கோரிக்கையைப் பூர்த்தி செய்வோம். அதனைச் செய்வதற்கான ஆற்றல் எங்களுக்கு உள்ளது.”

அந்த மை அதன் விநியோகிப்பாளர் கூறுவது போல உண்மையிலேயே அழிக்க முடியாததா என்பதை சோதிக்குமாறு மட்டுமே தமது துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அகமட் ரிட்சுவான் சொன்னார்.

தேர்தல் ஆணையத்திடமிருந்து விரைவில் அதன் மாதிரிகள் கிடைக்கும் என அவர் எதிர்பார்க்கிறார்.

தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் ஏதும் மையில் கலக்கப்பட்டுள்ளதா என்பதை சோதிப்பதற்காக அந்த மையின் மாதிரிகளை தேர்தல் ஆணையம் இரசாயனத் துறைக்கு அனுப்பும் என ஆணையத் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் கூறியுள்ளது பற்றி அகமட் ரிட்சுவான் கருத்துரைத்தார்.

பின்னர் அந்தச் சோதனை முடிவுகள் இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை, ஜாக்கிம், பாத்வா மன்றம் ஆகியவற்றின் கருத்துக்களுக்காக அனுப்பி வைக்கப்படும். அடுத்து  தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு தகவல் கொடுக்கப்படும் என்றும் வான் அகமட் கூறினார்.

TAGS: