கொரோனா தடுப்பு பணி: இந்தியாவுக்கு ஐ.எம்.எப்., பாராட்டு

வாஷிங்டன் : ‘கொரோனா வைரசிலிருந்து மக்களை பாதுகாப்பதையும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நசிந்து விடாமல் பாதுகாப்பதையும் முக்கியமாக வைத்து, இந்திய அரசு செயல்பட்டு வருகிறது’ என, ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், ஐ.எம்.எப்., மற்றும் உலக வங்கியின் ஆண்டு கூட்டம் நடக்கிறது. இதையொட்டி, ஐ.எம்.எப்., நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா கூறியதாவது: கொரோனா தொற்றை எதிர்த்து, உலகமே போராடி வருகிறது. இதிலிருந்து முழுமையாக விடுதலையாகும் வரை, நாம், பல சவால்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில், கொரோனாவுக்கு எதிராக போராடுவது மாபெரும் சவால். கொரோனாவுக்கு, இந்தியாவில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். அதனால், வைரசிலிருந்து மக்களையும், அவர்களது உடல் நலத்தையும் பாதுகாப்பதே முக்கியமாக வைத்து, இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனாவால், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் நசிந்து போகாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதேநேரத்தில், இந்திய அரசு, தன் சக்திக்கு உட்பட்டு, பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. கொரோனா பரவல் துவங்குவதற்கு முன், வேகமான பொருளாதார வளர்ச்சி உடைய நாடாக இருந்தது. கொரோனா பரவலால், இந்தியாவின்மொத்த உள்நாட்டு உற்பத்தி, இந்த ஆண்டு, மிகவும் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளால், அடுத்த ஆண்டு, 8.8 சதவீத வளர்ச்சியை பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

பொருளாதார சீர்திருத்தங்களை நிறுத்தவில்லை

அமெரிக்காவில், இந்திய தொழிற்சாலை கூட்டமைப்பு சார்பில் நடந்த, இந்தியா -வெர்ஜீனியா வர்த்தக மாநாட்டில், அமெரிக்காவுக்கான இந்திய துாதர் தரன்ஜித் சிங் சந்து பேசியதாவது: கொரோனா பரவலால், இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான். அதனால், பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகள் எடுப்பதை இந்தியா நிறுத்தவில்லை. தொழிலாளர், விண்வெளி, விவசாயம் உட்பட பல துறைகளில், இந்தியா சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த சீர்திருத்தங்களை பயன்படுத்தி, இந்தியாவில், அமெரிக்கர்கள் முதலீடு செய்து, பயன் பெற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்

dinamalar