உறைந்த உணவு பேக்கேஜிங்கில் கொரோனா வைரஸ்: சீனா எச்சரிக்கை

பெய்ஜிங்: மாசுப்படுத்தப்பட்ட உறைந்த உணவு பேக்கேஜிங்கின் மூலமாக கொரோனா வைரஸ் உருவாகக்கூடும் என சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 19 நாடுகளை சேர்ந்த 56 நிறுவனங்களிலிருந்த ஊழியர்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து அந்நிறுவனங்களிலிருந்து உறைந்த உணவு இறக்குமதிக்கு சீனா, தற்காலிகத் தடை விதித்திருந்தது. சமீபத்தில் கிழக்கு சாண்டோங் மாகாணத்தின் முக்கிய நகரான கிங்டாவோவில், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 8 நோயாளிகள் உட்பட ஒன்பது பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கிங்டாவோ நகரில் வசிக்கும் சுமார் ஒன்பது லட்சம் பேருக்கும், கொரோனா பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டது.

புதிய தொற்றுக்கான காரணம் குறித்து சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ஆய்வு செய்து வந்த நிலையில், உறைந்திருக்கும் உணவின் மேற்புறத்தில் புதிய கொரோனா வைரஸ் உயிர் வாழ்வது கண்டறியப்பட்டது. இது குறித்து ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, இது உறைந்த உணவு வழியாக உயிருள்ள கொரோனா வைரஸ் நீண்ட தூரத்திற்கு பரவ முடியும் என்று அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்ட முதல் நிகழ்வாகும் என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக உறைந்த உணவு பேக்கேஜிங்கில் இருந்து எடுக்கப்பட்ட சில மாதிரிகளில் கொரோனாவின் மரபணு தடயங்களை சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) கண்டறிந்தது. இருப்பினும், இந்த மாதிரிகளில் காணப்படும் வைரஸின் அளவு மிகக் குறைவாக இருந்தது.

சீன சி.டி.சி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் மாதம், கிங்டாவோவில் இரண்டு கப்பல் பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த பணியாளர்கள் உறைந்த உணவு பேக்கேஜிங்கைக் கையாண்டுள்ளனர், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், இவர்கள் உறைந்த உணவு பேக்கேஜிங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டார்களா, அல்லது வழக்கமான கொரோனா தொற்றுக்கு உள்ளானார்களா என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் உறைந்த உணவு பேக்கேஜிங் கையாளும் தொழிலாளர்கள் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு சீன சி.டி.சி அறிவுறுத்தியுள்ளது

dinamalar