சீனாவில் வேகமெடுக்கும் பொருளாதார வளர்ச்சி

பீஜிங்: சீனாவில், கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரம், தற்போது அதிவேக வளர்ச்சி அடைந்து வருகிறது. நம் அண்டை நாடான சீனாவில் இருந்து தான், கொரோனா வைரஸ் முதலில் பரவத் துவங்கியது.

எனினும், இங்கு, தற்போது வைரஸ் பாதிப்பு, முழுதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த சீன பொருளாதாரமும், தற்போது அந்த பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு வருகிறது.உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக விளங்கும் சீனா, கடந்த ஜூலை முதல் செப்டம்பர் இடையிலான காலாண்டில், 4.9 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது.

அதற்கு முந்தைய காலாண்டில், 3.2 சதவீதமாக, பொருளாதார வளர்ச்சி இருந்தது.சீனாவில், அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுஉள்ளன. பெரும்பாலான தொழில்கள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன. சில்லறை செலவினங்கள், கொரோனா வைரசுக்கு முந்தைய காலத்தில் இருந்த நிலைமைக்கு மீண்டும் திரும்பியுள்ளன.

முக கவசம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் போன்ற பொருட்களின் ஏற்றுமதி தேவை அதிகரித்துள்ளது. இதனால், உள்நாட்டு உற்பத்தியும் வளர்ச்சியை காண்கிறது. ‘அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார செயல்பாடுகள் குறைந்து வரும் நிலையில், இந்த ஆண்டு, வளர்ச்சியை காணும் பெரிய பொருளாதார நாடாக, சீனா இருக்கும்’ என, பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்

dinamalar