இந்தியர்கள் ஓட்டு யாருக்கு? அனல் பறக்கும் பிரசாரம்

நியூயார்க் : அமெரிக்க அதிபர் தேர்தலில், அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஓட்டு, மிக முக்கியமான பங்கை வகிக்க உள்ளது. அவர்களது ஓட்டுகளைப் பெறுவதற்காக, ஒரே நேரத்தில், இரண்டு முக்கிய கட்சிகளுக்கு ஆதரவாகவும் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில், இந்தியாவை பூர்வீகமாக உடைய கமலா ஹாரிஸ், துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.இந்தியர்களின் ஓட்டுஇந்தத் தேர்தலில்,அமெரிக்க இந்தியர்களின் ஓட்டு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. இழுபறி உள்ள மாகாணங்களில், இந்தியர்கள் அதிகம் வசிப்பதால், அவர்களது ஓட்டு, வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக் கூடியதாக அமைந்துள்ளது.அதனால், இந்தியர்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்காக, இரண்டு கட்சிகளும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்க வாழ் இந்தியர்களுடனான சந்திப்புக்கு, இரு கட்சிகளும் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்திருந்தன.குடியரசு கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில், பல பிரபல இந்திய வம்சாவளியினர் பங்கேற்றனர்.மிகச் சிறந்த நண்பர்நியூயார்க்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில், டிரம்புக்கான, அமெரிக்க இந்தியர்கள் பிரசாரக் குழுவின் தலைவர் அல் மான்சன், தொழிலதிபர் சின்டு படேல், டாக்டர் ராஜ் பயானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அவர்கள் கூறியதாவது:டொனால்டு டிரம்ப், இந்தியாவின் மிகச் சிறந்த நண்பர். காஷ்மீர் விவகாரம், சீனாவுடனான பிரச்னை என, பல்வேறு விஷயங்களில் இந்தியாவுக்கு அவர் ஆதரவு தெரிவித்து வருகிறார். அதனால், அமெரிக்க வாழ் இந்தியர்கள் அனைவரும், டிரம்புக்கு ஆதரவாக ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினார்.
”ஜோ பிடன், சீனாவுக்கு ஆதரவானவர். அதனால் நிச்சயம் இந்தியாவுக்கு எதிராகவே அவர் செயல்படுவார். இந்தியா மற்றும் அமெரிக்காவின் நலனில் அக்கறை உள்ளவர்கள், டிரம்புக்கு ஆதரவாக ஓட்டளிக்க வேண்டும்,” என, டிரம்பின் மகன், டொனால்டு டிரம்ப் ஜூனியர் பேசினார்.இந்த கூட்டம் நடந்த அதே நேரத்தில், கலிபோர்னியாவில், ஜனநாயக கட்சியின் ஜோ பிடன், கமலா ஹாரிசுக்கு ஆதரவாக, அமெரிக்க இந்தியர்களின் பேரணி நடத்தப்பட்டது.

தொழிலதிபரான அஜய் பதுாரியா, அவரது மனைவி வனிதா ஆகியோர், இதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.’இந்தியாவை பூர்வீகமாக உடைய கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை’ என, பேரணியில் பேசியவர்கள் குறிப்பிட்டனர்

dinamalar