வரும் நவம்பரில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறதா?

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் மத்தியில் எதிர்ப்பு சக்தி ஆற்றலை உருவாக்குவது பரிசோதனையில் தெரியவந்து இருப்பதாக ஆஸ்ட்ரா செனகா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன், சீனாவின் ஹூபெய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக வெளிப்பட்டது கொரோனா வைரஸ். சுமார் 10 மாதங்களில் உலகம் முழுவதும் வியாபித்துள்ள இந்த வைரஸ், மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துவிட்டது.

உலக அளவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட  உயிரை காவு வாங்கியுள்ள கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னணி நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. பெரும்பாலான தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனைகளில் உள்ளன.  இந்த தடுப்பூசிகள் எப்போது பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்பது மக்களின் ஏக்கமாக உள்ளது.

இந்த நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் தயாரித்துள்ள  தடுப்பூசி வெகு விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்பன போன்ற செய்திகள் வெளிவந்துள்ளன. இங்கிலாந்தின் பிரபல நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலின் படி, லண்டனில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைக்கு ஆஸ்ட்ரா செனகா  தடுப்பு மருந்தின் முதல் பேட்ச் வரும் நவம்பர் முதல் வாரத்தில் வழங்கப்படும் எனவும் இதற்கு தயராகுமாறும்  மருத்துவமனைக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும்  கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஆஸ்ட்ரா செனகா நிறுவனம்  வெளியிட்டுள்ள தகவலில்,   தடுப்பு மருந்து இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் மத்தியில் நல்ல எதிர்ப்பு சக்தி ஆற்றலை உருவாக்குவது பரிசோதனையில் தெரியவந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

dailythanthi