அமெரிக்க அதிபர் நாற்காலியில் அமரப்போவது… யார்? உலக நாடுகள் எதிர்பார்க்கும் தேர்தல் நாளை நடக்கிறது

வாஷிங்டன்:அமெரிக்காவின், 59வது அதிபராக பதவியேற்கப் போவது யார் என்பதை நிர்ணயிக்கும் தேர்தல், நாளை நடக்க உள்ளது. குடியரசு கட்சியைச் சேர்ந்த, அதிபர் டொனால்டு டிரம்ப், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்; அதுவும், நவம்பர் மாதத்தில், முதல் திங்கள் கிழமைக்கு அடுத்து வரும் செவ்வாய்க் கிழமையில்தான் தேர்தல் நடக்கும். இதன்படி, அமெரிக்காவில் அதிபர் பதவிக்கு நாளை தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப், 74, மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், 77, போட்டியிடுகிறார்.குடியரசு கட்சி சார்பில், துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில், இந்தியாவை பூர்வீகமாக உடைய கமலா ஹாரிஸ்,துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

‘எலக்டோரல் காலேஜ்’

அதிபர் தேர்தலுடன், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை, எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்கான தேர்தலும் நடக்கவுள்ளது. அதிபர் பதவிக்கான தேர்தலில், மக்கள் அளிக்கும் ஓட்டு நேரடியாக அதிபர் வேட்பாளர்களுக்கு கிடைத்தாலும், அதனால் மட்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட மாட்டர்.மக்கள் அளிக்கும் ஓட்டு களின் அடிப்படையில், ‘எலக்டோரல் காலேஜ்’ எனப்படும், வாக்காளர் குழுவைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

அதாவது, ஒரு குறிப்பிட்ட மாகாணத்தில், அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப, வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பர்.மொத்தம், 50 மாகாணங்களையும் சேர்த்து, 588 வாக்காளர் குழு உறுப்பினர் இருப்பர். இதில், 270 பேரின் ஆதரவு பெறுபவரே அதிபராக முடியும்.கடந்த, 2016 தேர்தலில், டிரம்பை விட, அவரை எதிர்த்து போட்டியிட்ட, ஜனநாயகக் கட்சியின், ஹிலாரி கிளிண்டனுக்கு, 30 லட்சம் ஓட்டுகள் அதிகம் கிடைத்தது.

அதாவது மக்கள் அளித்த ஓட்டுகளில், டிரம்புக்கு, 46.1 சதவீதமும், ஹிலாரிக்கு, 48.2 சதவீதமும் கிடைத்தன. ஆனால், எலக்டோரல் காலேஜ் ஓட்டெடுப்பில், டிரம்புக்கு, 304 பேரின் ஆதரவும், ஹிலாரிக்கு, 227 பேரின் ஆதரவும் கிடைத்தன. அதனால், டிரம்ப் அதிபரானார்.அமெரிக்க மக்கள், நாளை தேர்தலில் ஓட்டளிக்கவுள்ளனர்.

எலக்டோரல் காலேஜ் ஓட்டெடுப்பு, டிச. 14ல் நடக்கிறது. அடுத்த ஆண்டு, ஜன., 6ல் பார்லிமென்ட் கூடி, தேர்தல் முடிவை அறிவிக்கும். அதன்பின், ஜன., 20ல், புதிய அதிபர் பதவியேற்பார். அமெரிக்க வரலாற்றிலேயே, இரண்டு அதிபர் வேட்பாளர்களும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பது இதுவே முதல் முறை. ஜோ பிடன் வென்றால், அதிக வயதில் அதிபராகும் பெருமையை பெறுவார்.

மேலும், 28 ஆண்டுகளுக்குப் பின், அதிபரை வென்ற பெருமையையும் பெறுவார். டிரம்ப் மீண்டும் வென்றால், தன் பதவிகாலத்தின் கடைசியில், அதிக வயதான அதிபர் என்ற பெருமையைப் பெறுவார். இதற்கு முன், ரொனால்டு ரீகன், 77 வயதில், தன் பதவி காலத்தை நிறைவு செய்தார்.

தபால் ஓட்டுகள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்த முறை, முன்னதாகவே தபால் ஓட்டளிக்கும் வசதி அறிவிக்கப்பட்டது. இதன்படி, ஏற்கனவே, பெரும்பாலான மாகாணங்களில் தேர்தல் நடைமுறை முடிந்துள்ளது. இதுவரை, ஒன்பது கோடி பேர் ஓட்டளித்துள்ளனர். கடந்த தேர்தலில் பதிவான மொத்த ஓட்டில், 65 சதவீதம் ஏற்கனவே பதிவாகியுள்ளது.

இதற்கிடையே, டிரம்ப் மற்றும் பிடன், கடைசி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நாளில், நான்கு இடங்களில் டிரம்ப் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:எண்ணெய் பொருட்கள் உற்பத்தியில், நாம் தன்னிறைவு பெற்றுள்ளோம். ஆனால், அதை தடுத்து நிறுத்தும் கொள்கையை பிடன் கொண்டுள்ளார். அதனால், துரப்பன நடவடிக்கைகளை பாதுகாக்கும் வகையில், புதிய அரசாணையில் கையெழுத்திட்டுள்ளேன்.

அதிபர் தேர்தலில் மற்றும் எம்.பி., பதவிகளுக்கான தேர்தலில், குடியரசு கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பெறும். நான்கு ஆண்டுகளுக்கு முன் பெற்றதைவிட, சாதனை வெற்றியைப் பெறுவோம். கடந்த நான்கு ஆண்டுகளில் சிறப்பான பணிகளை செய்துள்ளதால், நமக்கு ஆதரவு அலை வீசுகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.

பிரசார கூட்டங்களில், ஜோ பிடன் பேசியதாவது:இந்த நாட்டை பிளவுபடுத்திய, நாட்டை பாதுகாக்க தவறிய டிரம்பின் ஆட்சிக்கு, இந்த தேர்தல் முடிவு கட்டும். இந்தத் தேர்தலில், அதிபர் பதவியில் இருந்து டிரம்பை துாக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர். நாட்டின் எதிர்காலத்தை மாற்றக் கூடிய சக்தி உங்களிடம் உள்ளது. அதை தேர்தலில் பயன்படுத்துங்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.

அதிபர் தேர்தலில் வினோதம்

வழக்கம்போல், நவம்பர் மாதத்தில், முதல் திங்கள் கிழமைக்கு அடுத்த செவ்வாய்க்கிழமையில் தேர்தல் நடக்க உள்ளது. ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசு கட்சியைச் சேர்ந்தவரே வெற்றி பெற உள்ளார்.அதே நேரத்தில், இந்தத் தேர்தல், பல புதுமை களை சந்திக்கிறது. முதல் முறையாக, ஆப்ரிக்கா, இந்தியாவை பூர்வீகமாக உடைய பெண், துணை அதிபர் பதவிக்கு நிறுத்தப்பட்டுள்ளார். அதிபர் வேட்பாளர்கள் இருவரும், 70 வயதை தாண்டியவர்கள்.

நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பெருந்தொற்று நோய் பரவியுள்ள நிலையில், இந்தத் தேர்தல் நடக்க உள்ளது.கடந்த, 1918ல் நடந்த இடைக்கால தேர்தலின்போது, ‘ஸ்பானிஷ் ப்ளூ’ பரவியிருந்தது. அதனால், ஓட்டு சதவீதம், 20 சதவீதம் குறைந்தது. முதல் உலகப் போரில், 20 லட்சம் பேர் பங்கேற்றதும் இதற்கு காரணம். அதே நேரத்தில், 1920ல் நடந்த அதிபர் தேர்தலில், வாரன் ஹார்டிங் வென்றபோது, வைரஸ் பாதிப்பு முழுதுமாக மறைந்திருந்தது.இந்த முறை வைரஸ் பரவல் உள்ளதால், தேர்தல் நாளுக்கு முன்பாகவே, தபால் ஓட்டுகள் உள்ளிட்டவை மூலமாக ஓட்டுப் பதிவு நடந்துஉள்ளது.

கடந்த, 1937 வரை, புதிய அதிபர், மார்ச்சில் தான் பதவியேற்றார். ஓட்டுகள் எண்ணுவதற்கு அதிக காலம் எடுத்துக்கொண்டதே அதற்கு காரணம். கடந்த, 2000ல் நடந்த தேர்தலின்போது, டிச., 12 வரை முடிவு தெரியாமல் இருந்தது. உச்ச நீதிமன்றம் தலையிட்டு, ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷை அதிபராக அறிவித்தது.இந்தத் தேர்தலில், தபால் ஓட்டுகளில் மோசடி நடப்பதாக, அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். அதிபர் பதவியில் இருப்பவரே, தேர்தல் நடைமுறைக்கு எதிராக புகார் கூறுவது வினோதம்.

அதிபராக உள்ள டிரம்ப், வைரஸ் பிரச்னை இருந்தபோதும், தீவிர பிரசாரத்தில் உள்ளார். அதே நேரத்தில், எதிர்த்து போட்டியிடும், ஜோ பிடன், பிரசாரத்தால் வைரஸ் பரவுவதை தவிர்க்க, அதிக அளவு பிரசார கூட்டங்களை நடத்தவில்லை.இதற்கு முன், 19ம் நுாற்றாண்டில், ஜேம்ஸ் கார்பீல்ட், பெஞ்சமின் ஹாரிசன், வில்லியம் மெக்கின்லி; 20ம் நுாற்றாண்டில், ஹார்டிங் ஆகியோர், அதிக அளவு பிரசாரத்தில் ஈடுபடவில்லை. பிரசாரங்கள், அவர்களைத் தேடி வந்தன. தற்போதும், பிடனுக்கு அதுவே நடந்துள்ளது.

தேர்தல் அட்டவணை

நவ., 3: அதிபர் பதவிக்கான ஓட்டுப் பதிவு

டிச., 14: ‘எலக்டோரல் காலேஜ்’ எனப்படும் வாக்காளர் குழுவின் ஓட்டுப் பதிவு

2021, ஜன., 6: அமெரிக்க பார்லிமென்ட் கூடி, முடிவுகளை அறிவிக்கும்

ஜன., 20: புதிய அதிபர் மற்றும் துணை அதிபர் பதவியேற்பர்.

dinamalar