எவரெஸ்ட் சிகரம் ஏற நேபாளம் அனுமதி

காத்மாண்டு: நம் அண்டை நாடான நேபாளம், பொருளாதார இழப்பை சரி செய்ய, எவரெஸ்ட் சிகரம் உட்பட, மலையேற்ற சாகச பயணங்களுக்கு மீண்டும் அனுமதி அளித்துள்ளது.

நேபாள அரசு, கொரோனா பரவலை தடுக்க, எவரெஸ்ட் உள்ளிட்ட, எட்டு மலைச் சிகரங்களில் ஏறவும், மலைகளில் சாகச பயணங்களை மேற்கொள்ளவும், மார்ச்சில் தடை விதித்தது. இதனால், சுற்றுலா வருவாயை சார்ந்துள்ள நேபாளத் தின் பொருளாதாரம் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா துறையைச் சேர்ந்த எட்டு லட்சம் பேர், வருவாய் இழந்துள்ளனர்.

இந்நிலையில், பொருளாதார இழப்பை சீர் செய்ய வேண்டிய நெருக்கடி காரணமாக, மலையேற்றம் உள்ளிட்ட சாகச பயணங்களுக்கு நேபாள அரசு அனுமதி அளித்துஉள்ளது. இது குறித்து, நேபாள சுற்றுலா துறை டைரக்டர் ஜெனரல் ருத்ர சிங் தமங் கூறியதாவது: சுற்றுலா துறையின் வருவாய் பாதிப்பை கருத்தில் வைத்து, சிகரங்கள் மற்றும் மலையேற்ற சாகச பயணங்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. எனினும், மலையேற அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.

முன்னதாகவே விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள் மட்டுமே, மலையேற அனுமதிக்கப்படுவர். அவர்கள், தங்கள் நாட்டில் இருந்து புறப்படும் முன், கொரோனா பாதிப்பில்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டும். நேபாளத்தில் அவர்கள், ஒரு வாரம் ஓட்டலில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பின், மீண்டும் கொரோனா பரிசோதனை செய்த பின், மலையேற அனுமதிக்கப்படுவர். இவ்வாறு, அவர் கூறினார்

dinamalar