சீன நிறுவனங்கள் மீதான நியாமற்ற அடக்குமுறையை அமெரிக்கா நிறுத்த வேண்டும் – சீன வர்த்தக அமைச்சகம் கருத்து

சீன நிறுவனங்கள் மீதான நியாமற்ற அடக்குமுறையை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன், கடந்த 12 ஆம் தேதி அமெரிக்க அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, சீன ராணுவத்தால் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது சீன ராணுவத்துடன் தொடர்பில் உள்ள நிறுவனங்களில், அமெரிக்க முதலீடுகள் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்க அரசின் இந்த அறிவிப்பு சீனாவின் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் இந்த முடிவால் சீன தொலைதொடர்பு நிறுவனம், சீன அலைபேசி நிறுவனம் மற்றும் கண்காணிப்பு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்டவை மிகுந்த பாதிப்பை சந்திக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவின் மூலதனத்தை சீனா தனது இராணுவம், உளவுத்துறை மற்றும் பிற பாதுகாப்பு எந்திரங்களின் வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலுக்காகவும் அதிகளவில் சுரண்டிக் கொண்டிருக்கிறது”என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு சீனாவின் வர்த்தக அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன நிறுவனங்கள் மீதான நியாயமற்ற அடக்குமுறையை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தடை உத்தரவுக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சகமும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

dailythanthi