எத்தியோப்பியாவில் பஸ் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு – 34 பேர் பலி

எத்தியோப்பியாவில் பஸ் மீது மர்ம நபர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 34 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அடிஸ் அபாபா: கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வரும் அதே வேளையில் சில பயங்கரவாத குழுக்களும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இதன் காரணமாக அந்த நாட்டு மக்கள் சூடான், தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக அங்கு இன ரீதியிலான மோதல்கள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில் அந்த நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பெனிஷாங்குல்-குமுஸ் பிராந்தியத்தில் நேற்று முன்தினம் இரவு பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த பஸ்சை வழிமறித்த மர்ம நபர்கள் சிலர் பஸ் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் பஸ்சில் இருந்த பயணிகளின் உடல்களில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

அதனை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த கொடூர தாக்குதலில் 34 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் நடந்த பகுதியில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தப்பியோடிய மர்ம நபர்களை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த தகவல்களை அந்த நாட்டின் தேசிய மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

malaimalar