ஸ்பேஸ் எக்சின் புதிய விண்கலத்தில் புறப்பட்ட 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்தனர்

ஸ்பேஸ் எக்சின் புதிய விண்கலத்தில் புறப்பட்ட அமெரிக்கா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்தனர்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்த புதிய விண்வெளி வீரர்கள்

வாஷிங்டன்: பூமிக்கு மேல் 400 கிலோ மீட்டர் தூரத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 6 மாதங்கள் தங்கி இருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் நேற்று முன்தினம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு புறப்பட்டனர். அமெரிக்காவின், புளோரிடா மாகாணம், மெரிட் தீவில் உள்ள, கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் விண்ணில் சீறி பாய்ந்தது. இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த ‘க்ரூ டிராகன்’ விண்கலத்தில் தான் விண்வெளி வீரர்கள் பயணித்தனர்.

இந்த நிலையில் பூமியில் இருந்து புறப்பட்டு 27 மணி நேர பயணத்துக்கு பின் நேற்று காலையில் ‘க்ரூ டிராகன்’ விண்கலம் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்தது. அங்கு ஏற்கனவே தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வரும் அமெரிக்க மற்றும் ரஷியாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் புதிதாக சென்றுள்ள 4 விண்வெளி வீரர்களை வரவேற்றனர்.

இவர்கள் அங்கு ஏற்கனவே இருக்கும் விண்வெளி வீரர்களுடன் இணைந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

அடுத்த கட்டமாக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘க்ரூ டிராகன்’ விண்கலம் மூலம் 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

malaimalar