சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருக்கும் பி.ராமசாமி, துணை முதல்வர் பதவியைத் தாம் “கெஞ்சிக் கூத்தாடி” பெற்றதாகக் கூறியுள்ள கட்சியின் சக தோழர் ஒருவரைச் சாடியுள்ளார்.
துணை முதல்வர் பதவியைக் கெஞ்சிக் கூத்தாடிப் பெற வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்றார் ராமசாமி. ஏனென்றால், மாநில அரசில் இந்தியர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்பது பற்றி தேர்தலுக்குப்பின் டிஏபி-இன் மத்திய செயல்குழு (சிஇசி)வில் விவாதிக்கப்பட்டது என்றாரவர்.
அதே வேளை, கட்சித் தோழர் எஸ்.என்.ராயருடன் கர்பால் சிங்கைப் பார்ப்பதற்கு மருத்துவ மனைக்குச் சென்றதையும் அவர் ஒப்புக்கொண்டார். மருத்துவ மணையில் இருந்ததால் இந்தியர் பிரதிநிதித்துவம் பற்றிப் பேசப்பட்ட சிஇசி கூட்டத்தில் அந்த மூத்த வழக்குரைஞர் கலந்துகொள்ளவில்லை.
“கர்பாலுடன் இந்தியர் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று சொன்னேனே தவிர எனக்காக அதைக் கேட்கவில்லை. அதற்காகக் கெஞ்சவும் இல்லை”, என்று அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“அதன்பின் கர்பால் லிம் குவான் எங்கிடம் பேசினாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது”,என்று பினாங்கு டிஏபி துணைத் தலைவருமான அவர் சொன்னார்.
“பதவியைத் தேடியோ அதிகாரத்தைத் தேடியோ டிஏபி-க்கு நான் வரவில்லை. ஒரு இலட்சியத்துக்காகத்தான் இதில் இருக்கிறேன். மனத்தில் பட்டதைப் பேசியதற்காக விரிவுரையாளர் பணியை விட்டு வந்தேன்.இப்போதும் மனத்தில் பட்டதைச் சொன்னேன்.அதற்காக டிஏபி என்மீது நடவடிக்கை எடுக்கப்போகிறதா?”, என்றவர் வினவினார்.
“தனிமனித வழிபாடு ஒழிய வேண்டும்”
ஞானாசிரியர்கள் என்று குறிப்பிட்டதற்காக தம்மீது கண்டனக்கணைகளை வீசியெறிந்துள்ளார் ராயர் என்று குறிப்பிட்ட ராமசாமி கர்பாலிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக அவர் தரம்தாழ்ந்து போயிருப்பதை நினைத்து வருத்தமும் ஏமாற்றமும் கொள்வதாகக் கூறினார்.
“இப்படிப்பட்ட தனிமனித வழிபாட்டையும் அச்சுறுத்தல் அரசியலையும் டிஏபி-இலிருந்து ஒழித்துக்கட்ட வேண்டும்”, என்று கோலாலம்பூருக்கு அலுவல் நிமித்தம் வந்துள்ள ராமசாமி தெரிவித்தார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை மாநில டிஏபி மாநாட்டில் அவ்விவகாரத்தை எழுப்பி பூகம்பத்தை ஏற்படுத்தப்போவதாக ராயர் கூறியிருப்பது பற்றிக் கேட்டதற்கு,“பயமுறுத்தலுக்கெல்லாம் அஞ்ச மாட்டேன்.ராயர் கூறியதுபோல் மாநில மாநாட்டில் பூகம்பமே வெடிக்கட்டும். எதையும் சந்திக்க நான் தயார்” என்றார்.
மத்திய செயலவை முடிவு செய்வதற்குமுன் பொதுத்தேர்தலில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று, ஏதோ அதிகாரம் தங்கள் கையில் இருப்பதாக நினைத்துக்கொண்டு வாக்குறுதி அளிக்கும் பேர்வழிகள் டிஏபி-இல் இருக்கக்கூடாது என்று கர்பால் சொல்லப்போக தலைவர்களுக்கிடையில் சர்ச்சை மூண்டது.
ராமசாமி, தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு தேர்தலில் இடம் கொடுக்கப்படும் என்று அறிவித்ததாக தமிழ் நாளேடுகளில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் கர்பால் அவ்வாறு கருத்துரைத்தார். இதற்குப் பதிலடியாக ராமசாமி டிஏபி-க்கு “ஞானாசிரியர்களும்” தேவையில்லை என்றார்.
இது ராயருக்கும் பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.தனசேகரனுக்கும் கோபமூட்ட அவர்கள் ஞானாசிரியர்கள் யார் என்பதை ராமசாமி அடையாளம் காட்ட வேண்டும் என்று குமுறியதுடன் அவ்வாறு கூறியதை மீட்டுக்கொள்வதுடன் அவர் கர்பாலிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று கூறினார்கள்.
ராமசாமி மன்னிப்பு கேட்பாரா என்று வினவியதற்கு தாம் எதுவும் தப்பாக சொல்லவில்லையே என்றார்.
“ஞானாசிரியராக இருப்பது கெடுதலான ஒன்று என நான் சொல்லவில்லையே. மேலும்,”‘ஞானாசிரியர்” என்றபோது எவருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லை.
“அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவோர் என்று கர்பால் பொதுவாக சொன்னார் அதைப் போலவே நானும் ‘ஞானாசிரியர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினேன்”, என்றார்.
கர்பால் “ஞானாசிரியர்களும் தேவைதான்” என்று அறிக்கை விட்டபோது தாம் அமைதியாக இருந்ததாகவும் அத்துடன் சர்ச்சை தணிந்தது என்றும் ஆனால் ராயரும் தனசேகரனும் அதைக் மீண்டும் பெரிதுபடுத்தி விட்டார்கள் என்றும் ராமசாமி கூறினார்.
அந்த இருவருக்கும் அடிநிலை உறுப்பினர்களின் ஆதரவு இல்லை.அதனால் கர்பாலின் ஆதரவு அவர்களுக்குத் தேவைப்படலாம். அதற்காக இப்படி தரம்தாழ்ந்து போக வேண்டாம் என்று என்றாரவர்.
இதற்கிடையில்,டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங் கட்சியின் மாநிலக் கூட்டத்துக்கு முன்பே அவ்விவகாரத்துக்குத் தீர்வு காணுமாறு சர்ச்சையிடும் தலைவர்களைக் கேட்டுக்கொண்டிருப்பதாக தெரிகிறது.