ஜொகூர் மாநிலச் சட்டமன்ற அமர்வின் போது, “பழிவாங்கும் தீர்மானம்” ஏதேனும் பெர்சத்துவுக்கு இருந்தால், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) ஜொகூர் மக்களின் நலன்களுக்கும் அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்கும் முக்கியத்துவம் அளிக்கும்.
ஜொகூர் அமானாத் தலைவர், அமினோல்ஹுடா ஹாசன், ஜொகூர் பி.கே.ஆர். தலைவர் சையத் இப்ராஹிம் சையத் நோ மற்றும் ஜொகூர் டிஏபி தலைவர் லீயு சின் தோங் ஆகியோரின் கூட்டு அறிக்கையில், பேராக்கில் அம்னோ மேற்கொண்ட அதே நடவடிக்கையைப் பெர்சத்து செய்ய விரும்பினால், அதனை அவர்களது கட்சி கவனத்தில் எடுத்துகொள்ளும் என்று கூறியுள்ளனர்.
“இன்று காலை, ஜொகூர் மாநிலத்த்ன் முன்னாள் மந்திரி பெசார் ஒஸ்மான் சப்பியான், மாநிலத்தில் உள்ள 12 பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் ‘பழிவாங்க’ நினைத்தால், அஹ்மத் பைசல் அஸுமுவின் அதேக் கதி ஜொகூர் மந்திரி பெசாருக்கும் நேரலாம் என்று கூறியுள்ளார்.
“நாளை ஜொகூர் மாநிலச் சட்டமன்ற அமர்வின் கடைசி நாள். பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர் எழுப்ப விரும்பும் எந்தவொரு நடவடிக்கையும் அல்லது தீர்மானமும் நாளை நடைபெறலாம்,” என்று அவர் தெரிவித்தார்.
பேராக் மந்திரி பெசாரான, பெர்சத்து துணைத் தலைவர் நேற்று அப்பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அந்நிலை ஜொகூரிலும் ஏற்படலாம் என்று சூசகமாக கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினருமான ஒஸ்மான் கூறியிருந்தார்.
கடந்த எட்டு மாதங்களாக, மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களை உருவாக்கிய, ஒரே கூட்டணியில் அம்னோவும் பெர்சத்துவும் இருந்தும், பைசல் வெளியேற்றப்பட்டது தனக்கு அதிர்ச்சியளித்ததாக ஒஸ்மான் கூறினார்.