“நஜிப்பின் பெக்கிடா உறவுகள் அவர் மலாய் தீவிரவாதி என்பதை நிரூபிக்கிறது”

பெக்கிடா எனப்படும் மலேசியப் பிரச்சார நலன் சங்கத்துக்கு அம்னோ தலைவர் நஜிப் ரசாக் அளித்துள்ள வெளிப்படையான அங்கீகாரம்,  தமது மிதவாதக் கோட்பாட்டையும் ஒரே மலேசியா வாதத்தையும் கை கழுவி விட்ட மலாய்த் தீவிரவாதி அவர் என்பதற்குத் தக்க சான்று என சிலாங்கூர் பாஸ் கட்சி சாடியுள்ளது.

“பெக்கிடா நிகழ்வில் அவர் கலந்து கொண்டது, அவருடைய “கடுமையான” பக்கத்தைக் காட்டுகிறது. அது மலாய் தீவிரவாதத்துக்கு ஒப்பாகும். அது ஒரு காலத்தில் அவர் பெரிதாக பேசி வந்த மிதவாதப் போக்கிற்கு மாறுபட்டதாகும்.”

“பெக்கிடா மறைமுகமான அமைப்பாகும். ஒரு காலத்தில் அம்னோ அதனுடன் அதிகாரத்துவத் தொடர்புகளை வைத்துக் கொள்ளக் கூட அஞ்சியது”, என அந்த இஸ்லாமியக் கட்சியின் சிலாங்கூர் மாநில துணை ஆணையர் காலித் சாமாட்  இன்று ஷா அலாமில் நிருபர்களிடம் கூறினார்.

அண்மைய அம்னோ ஆண்டுப் பொதுப்பேரவையில் கடைப்பிடிக்கப்பட்ட “தீவிரவாதப் போக்கையும்” அவர் குறை கூறினார்.

“அம்னோவுக்கு சவால் விடுக்கப்பட்டால் அது மலாய்க்காரர்களுக்கு சவால் விடுக்கப்படுவதாகப் பொருள்படும் என அவர்கள் மலாய்க்காரர்களிடம்  சொல்ல முயற்சி செய்கின்றார்களா? மலாய் என்றால் அம்னோ, அம்னோ என்றால் மலாய் என அவர்கள் சொல்ல வருகின்றார்களா? அதனால் இனத்தைத் தற்காப்பதற்காக ஊழலையும் அதிகார அத்துமீறல்களையும் மலாய்க்காரர்கள் மறந்து விட வேண்டும் என  சொல்லும் அளவுக்கு அவர்கள் சென்றுள்ளனர்.”

“ஷாரிஸாட் அப்துல் ஜலிலை அம்னோ மகளிர் ஏற்றுக் கொண்டது பெரிய திருப்பு முனை. நம்ப முடியாத தலைவர் ஒருவருக்கு ஆதரவு அளிக்குமாறு அங்கு கேட்டுக் கொள்ளப்பட்டது”, என காலித் கூறிக் கொண்டார்.

அம்னோவுக்கு விடுக்கப்படும் சவால், உண்மையில் மலாய்க்காரர்களுக்கு விடுக்கப்படும் சவால் அல்ல. மாறாக அந்த இனத்தை மேம்படுத்துவதற்கான முயற்சி ஆகும்.

“நாங்கள் மலாய் அரசியல் நிலக்களனை வீழ்த்த முயலவில்லை. அம்னோவின் ஊழல் மலிந்த தலைமைத்துவத்தை  அகற்றி விட்டு தூய்மையான ஆற்றல் மிக்க மலாய்த் தலைவர்களையே அமர்த்த விரும்புகிறோம்”, என காலித் விளக்கினார்.

அத்தகைய பிணைப்புக்களும் நஜிப் மற்றும் அம்னோவின் புதிய “கடினப்” போக்கும் பல இன மலேசியாவை ஆளுவதற்கு அம்னோ இனிமேல் தகுதியில்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளதைக் காட்டுகிறது என்றும் அவர் சொன்னார்.

கடந்த திங்கட்கிழமை பெக்கிடா ஏற்பாடு செய்திருந்த “பிரதமரைச் சந்திக்கும் நிகழ்வை”‘ நஜிப் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். அதில் 12,000க்கும் மேற்பட்ட பெக்கிடா உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

அந்த நிகழ்வில் ஆற்றிய உரையில் நஜிப், பெக்கிடா  வரும் தேர்தலில் தமக்கும் பிஎன்-னுக்கும் ஆதரவு அளித்தால் அதற்கு “உதவி” செய்ய முன் வந்தார்.

மலாய் முஸ்லிம்களுடைய நலன்களைப் பாதுகாக்கும் நோக்கத்தைத் தான் கொண்டுள்ளதாக பெக்கிடா தெரிவிக்கிறது. ஆனால் அது இத்தாலியில் உள்ள மாபியா கும்பல்களைப் போன்ற அமைப்பு என்றும் சிலர்  கூறிக் கொண்டுள்ளனர்.

TAGS: