பாகிஸ்தான் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் 7 பேர் உயிரிழப்பு

உயிரிழப்பு

பாகிஸ்தானில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இஸ்லாமாபாத்: சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டாக உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. நமது அண்டை நாடான பாகிஸ்தானும் கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை பரவி வருகிறது. முதல் அலையை காட்டிலும் 2-வது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது.  உயிரிழப்பும் 8 ஆயிரத்தை கடந்துள்ளது.

பாகிஸ்தான் ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் அந்த நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் தள்ளியுள்ளது.

இதன் காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதற்கு போதிய நிதி இல்லாமல் பாகிஸ்தான் அரசு திணறி வருகிறது. கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதனிடையே பாகிஸ்தானில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாவதால் நாடு முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தின் பெஷாவர் நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரி ஒன்றில் 100-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலருக்கு ஆக்சிஜன் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜனின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது.

இதனால் நோயாளிகள் பலர் கடும் மூச்சுத்திணறலுக்கு ஆளாகினர். இது தொடர்பாக நோயாளிகளின் உறவினர்கள் ஆஸ்பத்திரி நிர்வாகத்தை அணுகியபோது, ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் நோயாளிகளுக்கு அவர்களது உறவினர்களே ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி வழங்க வேண்டும் என கூறிவிட்டனர். ஆனால் எல்லோராலும் அதை செய்ய முடியவில்லை.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் நோயாளிகள் பலருக்கு ஆக்சிஜன் வழங்குவது முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை வினியோகம் செய்யும் நிறுவனத்தின் அலட்சியத்தாலேயே இது நடந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.

அதேசமயம் ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதை மேற்பார்வையிடும் ஆஸ்பத்திரி ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாகவே இந்த சோகம் நிகழ்ந்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

இது தொடர்பாக ஆஸ்பத்திரியின் தலைமை இயக்குனர் உள்பட ஊழியர்கள் பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

malaimalar