‘மத சுதந்திர அத்துமீறலில் பாக்., அரசே ஈடுபடுகிறது’

வாஷிங்டன்: ‘மத சுதந்திரத்தை பறிக்கும் செயலில், பாகிஸ்தான் அரசே ஈடுபடுகிறது’ என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம், திட்டமிட்டு மத சுதந்திரத்தை பறிக்கும் நாடுகள் குறித்த அறிக்கையை, பாதுகாப்பு அமைச்சகத்திடம், ஏப்ரலில் வழங்கியிருந்தது. அதன் அடிப்படையில், சீனா, பாக்., உள்ளிட்ட எட்டு நாடுகள், திட்டமிட்டு மத சுதந்திரத்தை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக, அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர், மைக் பாம்பியோ, நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டார். இதில், இந்தியா இடம் பெறாதது குறித்து, நேற்று, சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க துாதர், சாமுவேல் பிரவுன்பேக், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக செய்தியாளர்களிடம் பேசியதாவது:

பாகிஸ்தானில், அந்நாட்டு அரசே, எண்ணற்ற வகையில், மத சுதந்திர விதிமீறல்களில் ஈடுபடுகிறது.ஆனால், இந்தியாவில், கட்டாய மதமாற்ற தடை சட்டம் போன்ற ஒரு சிலவற்றில் தான், அரசின் பங்களிப்பு உள்ளது.இந்தியாவில், வகுப்புவாத வன்முறைகள் தான் அதிகம் உள்ளன. அத்தகைய சம்பவங்களுக்குப் பின், எடுக்கப்படும் போலீஸ் மற்றும் நீதித் துறை நடவடிக்கைகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் தான் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பாக்.,கில் கட்டாய திருமணம் மூலம், சிறுபான்மையினப் பெண்கள், சீனாவிற்கு கொண்டு வரப்படுகின்றனர். அந்நாட்டில், சிறுபான்மையினரான, ஹிந்து, கிறிஸ்துவ பெண்களை, காமப் பசிக்கு இரையாக்குவதும், கட்டாயமாக மதம் மாற்றி திருமணம் செய்வதும் நடக்கிறது.

இது போன்ற காரணங்களால் தான், திட்டமிட்டு மத சுதந்திரத்தை பறிக்கும் நாடுகள் பட்டியலில், பாக்., தொடர்ந்து இடம் பெற்று வருகிறது; இந்தியா இடம் பெறாமல் உள்ளது. மைக் பாம்பியோ, இந்தியாவுக்கு, பலமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, இந்தியா குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பிரச்னைகள் பற்றி, அவர் அரசுடன் பேசியுள்ளார். தற்போதைய சூழலில், இந்தியாவை பட்டியலில் சேர்க்கத் தேவையில்லை என, அவர் கருதி இருக்கலாம். அவரது முடிவில், நான் தலையிட முடியாது. இவ்வாறு, அவர் பேசினார்.

நிராகரிப்பு

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம், இந்தியா குறித்து அளித்துள்ள பரிந்துரைகளை, மத்திய அரசு நிராகரித்துள்ளது. ‘ஆணையத்தின் அறிக்கை ஒருதலைபட்சமானது. இந்தியா குறித்த ஆணையத்தின் தவறான கண்ணோட்டம் புதிதல்ல என்ற போதிலும், இம்முறை அது புதிய உச்சத்தை தொட்டுள்ளது’ என, மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது

dinamalar