வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து, அதிபர் டொனால்டு டிரம்ப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை, அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், சமீபத்தில் நடந்தது. இந்தத் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.இந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்க, டிரம்ப் மறுத்து வருகிறார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகளை தொடர்ந்தார். கீழமை நீதிமன்றங்களில், இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, டெக்சாஸ் மாகாணம் உட்பட, 18 மாகாணங்களின் அட்டர்னி ஜெனரல்கள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
‘ஜார்ஜியா, மிச்சிகன், பென்னில்ஸ்வேனியா, விஸ்கான்சின் உள்ளிட்ட மாகாணங்களில், ஜோ பைடனுக்கு ஆதரவாக அதிக ஓட்டுகள் பதிவானதில் மோசடி நடந்துள்ளது. ‘அதனால், இந்தத் தேர்தல் முடிவுகளை ரத்து செய்ய வேண்டும்’ என, மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
டெக்சாஸ் மாகாணத்தில், மோசடி நடந்ததாக கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அதுபோலவே, மற்ற மாகாணங்களின் நிலையும். அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன’ என, அமர்வு கூறியுள்ளது.தேர்தல் முடிந்து, ஒரு மாதத்துக்கு மேலாகியும், தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்து வரும், டிரம்புக்கு, இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது
dinamalar