வாஷிங்டன்: அமெரிக்காவில் இன்று (டிச.,14) முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது. இதையடுத்து மிச்சி கனில் உள்ள ஆய்வகத்திலிருந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கொரோனா தடுப்பூசியை அனுப்பி வைக்கும் பணி, நேற்று முதல் துவங்கியது.
கொரோனா தொற்றால், உலகம் முழுதும், 7.10 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு, கடந்த சில நாட்களாக, தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இங்கு, மூன்று லட்சம் பேர், தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.அங்கு கிறிஸ்துமஸ் விடுமுறை தினம் நெருங்குவதால், தொற்று பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின், ‘பைசர்’ நிறுவனம் உருவாக்கியுள்ள, கொரோனா தடுப்பூசி மருந்து பயன்பாட்டுக்கு, அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.இதையடுத்து, முதல்கட்டமாக, மிச்சிகனில் உள்ள ஆய்வகத்திலிருந்து, முதல்முறையாக, கொரோனா தடுப்பூசி, பல்வேறு மாகாணங்களுக்கும், லாரி வாயிலாக, நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.முதல்கட்டமாக புறப்பட்ட லாரிகள், நாடு முழுதும் உள்ள, 145 தடுப்பூசி விநியோக மையங்களை, இன்று வந்தடைகின்றன.
இதையடுத்து, தடுப்பூசி போடும் பணி, இன்று துவங்கவுள்ளது. அடுத்த, 425 மையங்களுக்கு, நாளையும், 66 மையங்களுக்கு நாளை மறுதினமும், தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.முதல்கட்டத்தில், 30 லட்சம் ‘டோஸ்’ மருந்துகள் விநியோகத்திற்கு கொண்டு வரப்படும் என்றும், மருத்துவப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
dinamalar