நைஜீரியாவில் பள்ளிக்கூடத்தை சூறையாடிய பயங்கரவாதிகள் – 400 மாணவர்கள் மாயம்

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் சிலர் பள்ளிக்கூடத்தை சூறையாடிய நிலையில் அங்கு பயின்ற சுமார் 400 மாணவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை.

அபுஜா: மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி பொதுமக்களை கொன்று குவிப்பதோடு, சிறுவர் சிறுமிகளை கடத்திச் சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கட்சினா மாகாணத்தில் அரசு ஆண்கள் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இங்கு 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இந்தப் பள்ளிக்கூடத்தில் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது கையில் துப்பாக்கிகளுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் இந்தப் பள்ளிக்கூடத்தை சூறையாடினர்.

இதனால் பீதியடைந்த மாணவர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே ஓடினர். பின்னர் அவர்கள் பயங்கரவாதிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக அருகில் உள்ள புதர்களில் மறைந்து கொண்டனர்.

இரவு முழுவதும் அங்கேயே பதுங்கி இருந்த மாணவர்கள் சூரிய உதயத்துக்கு பின் நேற்று காலை வீடுகளுக்கு திரும்பினர். இப்படி 406 மாணவர்கள் வீட்டுக்கு திரும்பி விட்ட நிலையில், சுமார் 400 மாணவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை.

மாயமான அந்த மாணவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களைப் பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் இணைந்து பள்ளிக்கூடத்துக்கு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று மாயமான மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

malaimalar