பீஜிங்: ”பருவ நிலை மாறுபாடு பிரச்னையை எதிர்கொள்ள, ஏற்கனவே அளித்த உறுதிகளை நிறைவேற்றுவோம். மேலும் கூடுதல் முயற்சிகளையும் மேற்கொள்வோம்,” என, சீன அதிபர் ஷீ ஜிங்பிங் உறுதி அளித்தார்.
பருவ நிலை மாறுபாடு பிரச்னையை எதிர்கொள்வது தொடர்பாக, 2015ல், பிரான்சின் பாரிசில் நடந்த மாநாட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, காற்று மாசு அளவை, 2030க்குள் குறைப்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க, இதில் கையெழுத்திட்டுள்ள, இந்தியா உள்ளிட்ட நாடுகள் உறுதி அளித்துள்ளன. உலகிலேயே, அமெரிக்கா மற்றும் சீனா தான் அதிக அளவு மாசு ஏற்படுத்துகின்றன.
இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், ‘நான் பதவியேற்றதும், பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவோம்’ என, அறிவித்துள்ளார்.பாரிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டதன், ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டி, ஐ.நா., ஏற்பாடு செய்திருந்திருந்த மாநாட்டில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில், பல நாட்டுத் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில், சீன அதிபர் ஷீ ஜிங்பிங் பேசியதாவது:பாரிஸ் ஒப்பந்தத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளின்படி, காற்று மாசை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை சீனா எடுத்து வருகிறது. ஏற்கனவே எடுத்த நடவடிக்கைகளுடன், புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படும்.காற்றில், கார்பன் டை ஆக்சைடின் அளவு, 2005ல் இருந்ததைவிட, 65 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாசு ஏற்படுத்தாத எரிபொருள்களின் பயன்பாடு, 25 சதவீதம் வரை உயர்த்தப்படும். சூரிய மின்சக்தியின் பயன்பாடு, 120 கோடி கிலோ வாட்டாக உயர்த்தப்படும். பருவ நிலை மாறுபாடு பிரச்னையை, அனைத்து நாடுகளும் இணைந்து எதிர்கொள்ள வேண்டும். அதற்கு, சீனா தயாராக உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்
dinamalar