89 வயதான மூதாட்டிக்கு செலுத்தப்பட்ட முதல் கொரோனா தடுப்பு மருந்து; கனடா அமைச்சர் பாராட்டு

ஒட்டாவா: கனடா நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சர் அனிதா ஆனந்த். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தடுப்பு மருந்து செலுத்துதல் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். முதற்கட்டமாக கனடாவின் அனைத்து மாகாணங்களுக்கும் 30 ஆயிரம் டோஸ் பைசர் பயான் டெக் தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்பட உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

அனைத்து மேலைநாடுகள்போல முதலில் தடுப்பு மருந்துகள் முதல்நிலை நோய்த் தடுப்பு பணியாளர்களுக்கு செலுத்தப்பட உள்ளன. அமெரிக்காவில் நேற்று தடுப்பு மருந்து செலுத்தும் பணி துவங்கிவிட்ட நிலையில் இன்று கனடாவில் 89 வயதான மூதாட்டி ஒருவருக்கு முதல் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

முதியோர் இல்லத்தில் வசிக்கும் இந்த மூதாட்டி கனடாவின் கியூபெக் மாகாணத்தை சேர்ந்தவர். கிசேல் லெவெஸ்க் என்ற இந்த மூதாட்டிக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இவரைத்தொடர்ந்து டொரண்டோ மாகாணத்திலுள்ள ஒன்டாரியோ பகுதியைச் சேர்ந்த அனிதா குய்டங்க்கன் என்ற மருத்துவப்பணியாளருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. முதல் தடுப்பு மருந்து செலுத்தப்படும் நிகழ்ச்சியை பொதுப்பணித்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் துவக்கி வைத்துள்ளார்.

கனடாவின் மக்கள் தொகையில் 48 சதவீதம் பேருக்கு தற்போது தடுப்பு மருந்து அவசரமாக தேவைப்படுகிறது. ஏழு பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு தற்போது உள்ள நிலையில் தடுப்பு மருந்து செலுத்தும் பணி துரிதப்படுத்தபட வேண்டிய நிலையில் கனடா உள்ளது. விரைவில் தடுப்பு மருந்து செலுத்தப்படும் பட்சத்தில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் கட்டுக்குள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது

dinamalar