தொற்று நோய்களை தடுப்பதில் சாதனை சிறுமி கீதாஞ்சலி தீவிரம்

நியூயார்க் : அமெரிக்காவின், ‘டைம்’ பத்திரிகையால், ‘இந்தாண்டின் சிறந்த குழந்தை’ என,தேர்வு செய்யப்பட்ட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, கீதாஞ்சலி, 15, எதிர்காலத்தில் தோன்றும் தொற்று நோய்களை தடுப்பதற்கான ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் கீதாஞ்சலி, குடிநீரில் உள்ள ஒட்டுண்ணிகளை அழிப்பது முதல், போதை பழக்க ஒழிப்பு வரை, நவீன தொழில்நுட்பங்கள் மூலம், மரபணு சார்ந்த தீர்வுகளை உருவாக்கியுள்ளார்.இவரது சாதனையை பாராட்டி, ‘டைம்’ பத்திரிகை, ‘இந்தாண்டின் சிறந்த குழந்தை’ என தேர்வு செய்து, கீதாஞ்சலி படத்தை முகப்பு அட்டையில் வெளியிட்டு, கவுரவித்துள்ளது. இந்நிலையில், கீதாஞ்சலி, தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி:என் முயற்சிகளுக்கு, பெற்றோர் பெரிதும் ஊக்கமளித்தனர். அது என் ஆய்வுகளுக்கு பெரிதும் துணையாக இருந்தது.

ஏராளமான மாற்றங்களுக்கு காரணமான, விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும் தான், என் முன்னோடிகள். போலியோ தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து, அதற்கு காப்புரிமை கோராத, ஜோனஸ் சால்க் போன்றவர்களை பின்பற்றி, சமூகத்திற்கு தொண்டு செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம்.கொரோனா போன்ற, பல தொற்று நோய்கள் அடுத்த, 100 ஆண்டு களுக்கு வரும். அத்தகைய தொற்று நோய்களை தடுப்பதற்கான் ஆய்வில் ஈடுபட்டுள்ளேன். கொரோனா தடுப்பூசி மருந்து, உலகின் மூலை முடுக்கில் உள்ள மக்களுக்கும் கிடைக்க வேண்டும். அதனால், தொழில்நுட்ப உதவி யுடன், கொரோனா தடுப்பூசி மருந்தை, திறம்பட விரைந்து விநியோகிக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறேன்.

ஆண்கள் அதிகம் உள்ள விஞ்ஞான ஆய்வுத் துறையில், அதிக அளவில் பெண்கள் வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.கீதாஞ்சலி, தன் கண்டுபிடிப்புகளுக்காக, ‘போர்ப்ஸ்’ இதழின், 30 வயதிற்குட்பட்ட சாதனையாளர்களின் பட்டியலில் இடம்பெற்று, ‘அமெரிக்காவின் இளம் விஞ்ஞானி’ என்ற, பாராட்டை பெற்றுள்ளார். புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உள்ள, ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு, பயிற்சி அளித்து வருகிறார்.

dinamalar