ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல்கள்: போலீஸ் தலைமை அதிகாரி உள்பட 9 பேர் பலி

9 ஆப்கானிஸ்தானில் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் போலீஸ் தலைமை அதிகாரி உள்பட 9 பேர் பலியாகினர்,

காபூல்,  உள்நாட்டு போர் நடந்து வரும் ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு வக்கீல்கள் மாகாண தலைமை போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோரை குறி வைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பர்வான் மாகாணம், சாரிகர் நகரில் மாகாண நெடுஞ்சாலை போலீஸ் தலைமை அதிகாரி வாலி முகமது உள்பட 5 போலீஸ் அதிகாரிகளின் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் சாலைக்கு அடியில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் இவர்களது கார் சிக்கி வெடித்து சிதறியது. இதில் வாலி முகமது உள்பட 5 போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

இதேபோல் பட்கீஸ் மாகாணம் முகூர் மாவட்டத்தில் சரக்கு லாரி ஒன்று சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் சிக்கி வெடித்து சிதறியதில் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் காயமடைந்தார். இந்த 2 குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும் உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த 3 நாட்களில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் அப்பாவி பொதுமக்கள் 28 பேர் கொல்லப்பட்டதோடு 47 பேர் படுகாயமடைந்ததாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

dailythanthi