பாகிஸ்தானில் தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் உள்ள தொழிற்பேட்டையில் ஐஸ்கட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இந்த தொழிற்சாலையில் வழக்கம்போல் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் தொழிற்சாலைக்குள் இருந்த பாய்லர் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததை போல அந்த பகுதியே அதிர்ந்தது. பாய்லர் வெடித்து சிதறியதில் தொழிற்சாலை கட்டிடம் முற்றிலுமாக இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் பல தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
மேலும் இந்த வெடிவிபத்தில் ஐஸ்கட்டி தொழிற்சாலைக்கு அருகில் உள்ள மேலும் 2 தொழிற்சாலைகள் பலத்த சேதமடைந்தன. இதற்கிடையில் விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் கட்டிட இடிபாடுகளில் இருந்து 8 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. மேலும் 16 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
malaimalar