கையுறை தயாரிப்பாளர், துணை நிறுவனத்திற்கு எதிராக 30 குற்றச்சாட்டுகள்

பிரைட்வே ஹோல்டிங்ஸ் கையுறை உற்பத்தியாளரும் அதன் இரண்டு துணை நிறுவனங்களும் ஊழியர்களின் வீட்டுவசதி, தங்குமிடம் மற்றும் வசதிகளுக்கான குறைந்தபட்ச தரநிலைகள் சட்டம் 1990 (சட்டம் 446) கீழ், பல்வேறு குற்றங்களை உள்ளடக்கிய 30 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

மனிதவள அமைச்சின் கூற்றுப்படி, பிரைட்வே மற்றும் அதன் துணை நிறுவனமான பையோபிரோ (ம) சென். பெர்.-க்கு எதிராக, மொத்தம் 22 குற்றச்சாட்டுகளும், அதன் மற்றொரு துணை நிறுவனமான லா க்ளோவ் (ம) சென். பெர்.-க்கு எதிராக குற்றச்சாட்டுகள் திறக்கப்படும்.

தீபகற்ப மலேசிய மனிதவள திணைக்களம் (ஜே.டி.கே.எஸ்.எம்.) இப்போது அரசு துணை வழக்கறிஞருக்குச் சமர்ப்பிக்கும் முன் விசாரணை அறிக்கையைத் தயாரிப்பதற்கான இறுதி கட்டத்தில் உள்ளது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

“குற்றங்களில், தொழிற்சாலை முதலாளி, சட்டம் 446-இன் பிரிவு 24D-இன் கீழ், ஜே.டி.கே.எஸ்.எம். தலைமை இயக்குநரிடமிருந்து விடுதி சான்றிதழை பெறத் தவறியதும் அடங்கும்,” என்று அமைச்சு தெரிவித்தது.

தவிர, குறைந்தபட்ச தரநிலை விவரக்குறிப்புகளை உள்ளடக்கிய சட்டம் 446-இன் கீழ், விதிமுறைகளை மீறியதற்காகவும் நிறுவனம் மீது வழக்குத் தொடரப்படவுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், நிறுவனத்திற்கு அதிகபட்சமாக RM1.5 மில்லியன் அல்லது ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் RM50,000 வரை தண்டம் விதிக்கப்படலாம்.

கடந்த வாரம், மனித வளத்துறை அமைச்சர் எம் சரவணன், லா க்ளோவ் மற்றும் பையோபிரோ தொழிற்சாலையின் கீழ் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளுக்கு திடீர் வருகை மேற்கொண்டார்.

லா க்ளோவ் மீதான சோதனையின் போது, ​​நூற்றுக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள், தங்குமிடங்களாக மாற்றப்பட்ட கொள்கலன்களில் வசித்து வந்தனர்.

சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் தான் இதுவரை கண்டிராத மோசமான நிலையில் இருந்ததாக சரவணன் கூறினார்.

பயோபிரோ மீதான அடுத்தடுத்த சோதனைகளில், அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க, அனைத்து தொழிலாளர்களும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்தச் சோதனை குறித்த தகவல், தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு ‘அரசு தரப்பினர்’-இடமிருந்து கசிந்ததை நேற்று சரவணன் உறுதிப்படுத்தினார்.

முன்னதாக, லா க்ளோவ் ஒரு தற்காலிக மூடல் அறிவிப்பைப் பெற்றது, அதே நேரத்தில் கோவிட் -19 தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்காக பையோபிரோவுக்கு அதிகாரிகள் RM1,000 தண்டம் விதித்தனர்.