பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்றாலும் 10 நாட்கள் கட்டாய தனிமை- துபாய் சுகாதார ஆணையம் அறிவிப்பு

துபாயில் கொரோனா தொற்றுடையவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்தாலும் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.

துபாய்: துபாய் சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

துபாயில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரிடம் நேரடியாக தொடர்பு வைத்துக் கொண்டவர்கள் அவரை கடைசியாக சந்தித்த நாளில் இருந்து கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இதில் அந்த நபருக்கு செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் தொற்று இல்லை என்றாலும் தனிமைப்படுத்துதலை தொடர வேண்டும்.

இந்த காலக்கட்டத்தில் தங்களுக்கு மூச்சு விடுவதில் ஏதேனும் சிரமம் உள்ளதா? அல்லது அறிகுறிகள் தென்படுகிறதா? என்பதை தாங்களாகவே சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுபோன்ற அறிகுறிகள் தனிமைப்படுத்தும் காலத்தில் தெரிய வந்தால் மீண்டும் அந்த நபர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

மேலும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தாலும் பரிசோதனை செய்து கொள்வது கட்டாயமாகும். இதில் கீழ்கண்ட சூழலில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். அவைகள் பின்வருமாறு:-

  • 2 மீட்டர் இடைவெளியில் தொடர்ந்து 15 நிமிடங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரிடம் பேசிக்கொண்டு இருந்தவர்கள்.

  • நேரடியாக கொரோனா தொற்றுடையவரை தொட்டு பேசியவர்கள்.

  • கொரோனா நோயாளிகளிடம் உரிய பாதுகாப்பு உடைகள் மற்றும் முககவசம் அணியாமல் சென்று பார்த்தவர்கள்.

  • ஒரே வீட்டில் அல்லது அறையில் தொற்றுடையவர்களிடம் வசித்தவர்கள் ஆகியோர் கட்டாயம் தங்களை 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

malaimalar