பாஸ்: என்எப்சி ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளையும் காரையும் நிலத்தையும் பறிமுதல் செய்யுங்கள்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தின் தொழில் சாராத சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு கூட்டரசு அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அந்தச் சொத்துக்களில் ஆடம்பர அடுக்கு மாடி வீடுகள், விலை உயர்ந்த ஒரு கார், புத்ராஜெயாவில் நல்ல மதிப்புள்ள நிலம் ஆகியவை அடங்கும் என பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசா கூறினார்.

அவற்றை பறிமுதல் செய்வதின் மூலம் எளிய நிபந்தனைகளுடன் கொடுக்கப்பட்ட 250 மில்லியன் ரிங்கிட் கடனில் ஒரு பகுதியை புத்ராஜெயா மீட்க முடியும் என அவர் சொன்னார். அதே வேளையில் கால்நடை வளர்ப்பு என்னும் அந்த நிறுவனத்தின் முக்கியத் தொழிலும் உறுதியாக இருக்கும் என அவர் கருதுகிறார்.

“அரசாங்கம் என்எப்சி சொத்துக்களை மீட்க வேண்டும். என் எப் சி-யின் குறிக்கோள்களுக்கு அப்பால் 250 மில்லியன் ரிங்கிட் மக்கள் வரிப்பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது.”

“அது நிச்சயம் நம்பிக்கை மோசடியாகும்,” என ஹுசாம் இன்று விடுத்த அறிக்கை கூறியது.

அரசாங்கம் இப்போது அந்தக் கடனில் எஞ்சியிருப்பதையாவது காப்பாற்ற வேண்டும் என பொருளாதார விவகாரங்களுக்குப் பொறுப்பன மூத்த கிளந்தான் ஆட்சி மன்ற உறுப்பினருமான ஹுசாம் கேட்டுக் கொண்டார்.

“தனி நபர்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் பெயரில் இருக்கும் சொத்துக்கள் அனைத்தும் அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என ஆணையிடப்பட வேண்டும்.”

“அந்த ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளும் புத்ரா ஜெயா நிலமும் திரும்ப ஒப்படைக்கப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட நிதியில் ஒரு பகுதியையாவது பெற முடியும். அவை தொடர்பு இல்லாத நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது,” என்றும் ஹுசாம் சொன்னார்.

TAGS: